அனந்தி சசிதரன் வெளியிட்ட தகவல்! டக்ளஸ் எம்.பி வரவேற்பு

Report Print Murali Murali in அறிக்கை
1530Shares

தன்னை கொலை செய்யும் நோக்கத்தோடு நடத்தப்பட்ட தாக்குதலை தமிழரசுக் கட்சியினரே நடத்தியதாக வடக்கு மாகாணசபை அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

2013ஆம் ஆண்டு வடக்கு மாகாணசபைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றிருந்தத. இது குறித்து ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

2013ஆம் ஆண்டு வடக்கு மாகாணசபைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தன்னை கொலை செய்யும் நோக்கத்தோடு நடத்தப்பட்ட தாக்குதலை தமிழரசுக் கட்சியினரே நடத்தியாதாக அனந்தி சசிதரன் தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

அவர் மீதான அந்தத் தாக்குதலை ஈ.பி.டி.பியினரும் ஆயுதம் தாங்கிய இராணுவத்தினருமே நடத்தியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அன்று எம்மீது குற்றம் சுமத்தியதுடன், சில தமிழ் ஊடகங்களும் அவ்வாறே செய்தியும் வெளியிட்டிருந்தன.

அக்குற்றச்சாட்டு தொடர்பில் இன்று உண்மை வெளியாகியுள்ள நிலையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மீது அன்று சுமத்தப்பட்ட குற்றச்சாட்டும் உண்மைக்குப் புறம்பானது என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அந்த அவதூறிலிருந்தும் ஈ.பி.டி.பியை வரலாறு விடுதலை செய்துள்ளது. 2013 ஆம் ஆண்டு வடக்கு மாகாணசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த காலத்தில் அப்பேது வேட்பாளராக போட்டியிட்டிருந்த ஆனந்தி சசிதரன் வீட்டின் மீது மர்ம நபர்களால் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது.

அந்த தாக்குதலை ஈ.பி.டி.பியினரே மேற்கொண்டதாக தமிழரசுக் கட்சியினர் பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு வந்தனர். அந்த அவதூறுச் செய்தியானது எமது வெற்றியையும் பாதிக்கச் செய்தது.

மேற்படி சம்பவம் தொடர்பாக தமிழ் காங்கிரஸ் கட்சியின் பிரமுகரும் தற்போதைய அக்கட்சியின் பேச்சாளருமான சட்டத்தரணி சுகாஸ் ஈ.பி.டி.பி மீது அபாண்டமான குற்றச்சாட்டுக்களை சுமத்தி அவதூறுகளை பரப்பி வந்திருந்தார்.

2013 ஆண்டுக்கான இலங்கை தொடர்பான அறிக்கையில் அந்தச் சம்பவத்தை ஈ.பி.டி.பியினரே செய்ததாகவும், அந்தத் தாக்குதல் நடைபெற்றபோது நேரடியாகக் கண்டதாகவும் சட்டத்தரணி சுகாஸ் கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது ஐக்கிய நாடுகள் சபையின் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, 2013ஆம் ஆண்டு செப்டெம்பர் 19 மாலையிலும், செப்டெம்பர் 20 அதிகாலையிலும் மாகாணசபைத் தேர்தலுக்கு முதல்நாள் அடையாளம் காணப்பட்ட ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் ஏனைய இராணுவச் சீருடை அணிந்திருந்த நபர்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்ட அனந்தி சசிதரனுடைய இல்லத்தைத் தாக்கினார்கள்.

தகவல்களின் படி, வன்முறையாளர்கள் வீட்டினுள் புகுந்து தனியுடமைகளை அழித்ததுடன், 8 நபர்களுக்கும் காயம் விளைவித்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் ஒருவரான சுதந்திரமான, நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கை அமைப்பின் சட்ட ஆலோசகர் கே.சுகாஸ் என்பவர், தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு தான் யார் என்பதை தன்னைத் தாக்குவதற்கு முன்னர் கூறியிருந்தார்.

பிரதேச கூட்டுறவுக்கான தெற்காசிய சங்க தேர்தல் கண்காணிப்புத் தலைவர் என். கோபாலசாமி பி.பி.சி. செய்திகள் சேவைக்கு இந்தத் தாக்குதலை படையினர்தான் மேற்கொண்டனர் என்பது தனக்கு உறுதியாகத் தெரியும் என்று கூறியுள்ளார். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் ஊடாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மீது அன்று சுமத்தப்பட்ட குற்றச்சாட்டும் உண்மைக்குப் புறம்பானது என்பதை காலம் வெளிப்படுத்தியுள்ளது.

இதுபோன்று கடந்த காலத்தில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களும், அவதூறுகளும் சுமத்தியவர்களின் பொய் முகங்கள் தற்போது அம்பலமாகி வருகின்றது.

உள்நோக்கத்துடனும், அரசியல் காழ்ப்புணர்ச்சியுடனும், சம்பங்களை திசை திருப்பும் நோக்கத்துடனும் உண்மைக்குப் புறம்பான தகவல்களை வழங்கி பிழைப்பு நடத்தியவர்களின் கதைகளை சர்வதேச முகவர்களும் ஆராயமல் விழுங்கிக் கொண்டுள்ளார்கள் என்பதும் தெரியவருகின்றது.

ஆனாலும் எம்மீது சுமத்தப்பட்ட பல குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளைத் தொடர்ந்து உண்மையான குற்றவாளிகள் யார்? என்பது அடையாளம் காணப்பட்டு உண்மை வெளிவருகின்ற நிலையில் ஈ.பி.டி.பியினராகிய நாம் நிரபராதிகள் என்பதையும், எம்மீது அவதூறுகள் வலிந்து சுமத்தப்பட்டுள்ளது என்பதை வரலாறு வெளிச்சத்திற்கு கொண்டுவந்து எம்மீதான களங்கத்தை துடைத்துள்ளது.