இலங்கைக்கு 300 பில்லியன் ரூபா உதவி வழங்கியுள்ள அமெரிக்கா

Report Print Rusath in அறிக்கை

அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி முகவரமைப்பின் (USAID) இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான பணிப்பாளராக ரீட் ஜே ஏஸ்கிலிமன் நியமிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி முகவர் அமைப்பினால் (USAID) தற்போது புதிய திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இலங்கையில் நல்லிணக்கம், சட்டத்தின் ஆட்சி மற்றும் இளைஞர் வேலைவாய்ப்பு ஆகியவற்றை ஊக்குவிக்கும் நிகழ்ச்சித் திட்டங்களுக்காக 4.5 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மேலும் பல முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள தருணத்திலேயே ஏஸ்கிலிமனின் வருகையும் இடம்பெற்றுள்ளது.

USAIDஇன் அபிவிருத்தி உதவிகளை நிர்வகிப்பதில் அவருக்குள்ள வலுவான அனுபவங்கள் காரணமாக இலங்கை மற்றும் மாலைதீவு மக்கள் நன்மையடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை பிராந்திய பாதுகாப்புக்கு பங்களிப்புச்செய்யும் மனித உரிமைகளின் அடிப்படைகளையும் அனைவருக்கும் சமத்துவத்தையும் உறுதிசெய்யும் நல்லிணக்கம், சமாதானம், வளம் மற்றும் ஜனநாயகம் நிலவும் நாடாக விளங்க வேண்டும் என்ற எங்கள் இணைந்த இலக்குகளுக்கு ஆதரவாக அமெரிக்க மக்களின் வரிப்பணத்திலிருந்து வழங்கப்படும் நிதி புத்திசாலித்தனத்துடன் பயன்படுத்தப்படுவதையும் அவர் உறுதிசெய்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

1956 முதல் இலங்கைக்கு அபிவிருத்தி மற்றும் மனிதாபிமான உதவியாக அமெரிக்க அரசாங்கம் 2 பில்லியனுக்கும் அதிகமான அமெரிக்க டொலர்களை (இலங்கை நாணய மதிப்பில் ஏறக்குறை 300 பில்லியன் ரூபா) வழங்கியுள்ளது.

இந்த உதவிகள் இலங்கையின் அனைத்து பகுதி மக்களுக்கும் நன்மையை அளித்துள்ளன. இந்த உதவிகள் அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சி, நல்லாட்சி சீர்திருத்தங்கள், மனிதாபிமான நெருக்கடிகளில் இருந்து மீளுதல் போன்ற விடயங்களில் அர்த்தமுள்ள தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளன.

அமெரிக்காவின் அபிவிருத்தி உதவியை மேலும் செயலூக்கம் மிக்கதாக மாற்றுவதற்கும், உதவிகள் எந்த மக்களிற்கு அதிகம் தேவையாகவுள்ளதோ அவர்களுக்கு அதனை வழங்குவதற்கும், அமெரிக்காவுடனான ஒத்துழைப்பு மற்றும் கூட்டுபங்கான்மையை வலுப்படுத்துவதற்கும் இலங்கை மற்றும் மாலைதீவு மக்களுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து நான் பெருமிதம் அடைகின்றேன் என ரீட் ஜே ஏஸ்கிலிமன் தெரிவித்துள்ளார்.

ரீட் ஜே ஏஸ்கிலிமன் 2000 ஆண்டு முதல் USAID இல் பணியாற்றிவருவதுடன், பிலிப்பைன்ஸ் மற்றும் பசுபிக் தீவுகள், ஆப்கானிஸ்தான், கம்போடியா, இந்தியா போன்ற நாடுகளில் பணிபுரிந்துள்ளார்.

மேலும், அவர் பொருளாதாரம், ஜனநாயக ஆட்சி, சூழல், கல்வி உட்கட்டமைப்பு தொடர்பான திட்டங்களின் வடிவமைப்பு மற்றும் நடைமுறைப்படுத்தலையும் சிறப்பாக முகாமைத்துவம் செய்துள்ளார். சமீபத்தில் வாஷிங்டனில் ஆசியாவிற்கான பணியகத்தின் பிரதி உதவி நிர்வாகியாக அவர் பணியாற்றியுள்ளார்.