இரணைதீவு மக்களுக்கு புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சி முழுமையான ஆதரவை வழங்குகின்றது

Report Print Sumi in அறிக்கை

தமது சொந்த நிலங்களுக்கும் தொழிலிடங்களுக்கும் திரும்பிச் செல்வது என்னும் உறுதிப்பாட்டுடன் கடல்தாண்டிச் சென்று அங்குள்ள ஆலயச் சுற்றாடலில் கடந்த பதினைந்து நாட்களுக்கு மேலாகத் தமது கோரிக்கைகளை வலியுறுத்தி வெகுஜனப் போராட்டம் நடத்திவரும் இரணைதீவு மக்களுக்கு எமது புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சி தனது முழுமையான ஆதரவைத் தெரிவிக்கின்றது.

இதேவேளை இரணைதீவு மக்களின் அடிப்படைத் தேவையான தமது பூர்வீக நிலத்திற்கான நியாயமான கோரிக்கையை அரசாங்கம் தாமதமின்றி ஏற்றுக்கொண்டு, அவர்களின் மீள்குடியேற்றத்திற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியின் அரசியல் குழுசார்பாக அதன் பொதுச்செயலாளர் சி.க.செந்திவேல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இரணைதீவு மக்கள் கடந்த ஒரு வருடமாகத் தமது சொந்த நிலத்தில் மீளக் குடியமர்வதற்காக தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இதற்குப் பதிலாக இதுவரை வெறும் வாக்குறுதிகள் மாத்திரமே வழங்கப்பட்டு வருகின்றதே தவிர உருப்படியான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் இரணைதீவு மக்கள் படகுகளில் கடல் தாண்டிச் சென்று தமது சொந்த மண்ணில் தங்கியிருந்து போராட்டத்தைத் தொடரவேண்டிய சூழலுக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

வட புலத்தின் கிழக்குப் பகுதியில் கேப்பாப்புலவு மக்கள் தமது பூர்வீக நிலங்களுக்காக விட்டுக்கொடுப்பின்றிப் போராடி வருகின்றார்கள்.

அதேபோன்று,மேற்குக் கரையில் பூநகரிக்கு அண்மையில் இரண்டு தீவுகளை உள்ளடக்கியுள்ளதான இரணைதீவிலும் மண் மீட்புக்காக மிகவும் துணிச்சலுடன் மக்கள் போராடி வருகின்றனர்.

ஆனால், இன்றைய மைத்திரி - ரணில் அரசாங்கத்துடன் இணக்க அரசியல் நடத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களையும், எடுத்ததுக்கெல்லாம் அமெரிக்காவையும், ஐ.நா.வையும் கூவி அழைக்கின்ற அடுத்த தரப்பினரையும் எதிர்பார்த்து நிற்காது தாமே தமது நிலங்களையும், இருப்பிடங்களையும் மீட்கப் போராடி வரும் இரணைதீவு மக்களுக்கு எமது கட்சி முழுமையான ஆதரவை வழங்குகின்றது.