எரிபொருள் விலை அதிகரிப்புக்கு காரணம் இதுவே: நிதி அமைச்சர் விளக்கம்

Report Print Murali Murali in அறிக்கை

புதிய விலைச்சூத்திரத்தின் பிரகாரம், இரண்டு மாதங்களுக்கு ஒரு தடவை எரிபொருள் விலைகள் மாற்றப்படும் என நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர, தனது அமைச்சில் இன்று மாலை நடத்திய விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர், “சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை குறைவதால் ஏற்படக்கூடிய அனுகூலங்களை நாட்டு மக்கள் பெறுவார்கள்.

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 77 டொலர்கள் என்ற அடிப்படையில் அதிகரித்துள்ளது. இதுவே உள்நாட்டில் எரிபொருள் விலை அதிகரிப்புக்கு காரணம்.

நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்ற இலக்குடன் பயணிக்கும் அரசாங்கம் என்ற வகையில், இலங்கை கனியவள கூட்டுத்தாபனத்தை தொடர்ந்தும் நட்டத்தில் இயங்குவதை அனுமதிக்க முடியாது என்று உணர்ந்துள்ளது.

அதன் அடிப்படையிலேயே எரிபொருளின் விலையை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்தது. மகிந்த ஆட்சி காலத்தில் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 46 டொலர்களாக இருந்த போது, இலங்கையில் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 150 ரூபாவிற்கும் அதிகமாக காணப்பட்டது.

இதேபோன்றே டீசல் பெற்றோல் முதலானவற்றின் விலைகளும் காணப்பட்டன. எனினும் தற்போது மசகு எண்ணெய் விலை பாரிய அளவில் அதிகரித்துள்ள போதும், மக்கள் நலன்கருதி இந்த அரசாங்கம் குறைந்த மட்டத்திலேயே விலையை அதிகரித்திருக்கின்றது.

2014ம் ஆண்டு ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 157 ரூபாவாக இருந்தது. 2015ம் ஆண்டில் பெற்றோலின் விலையை அரசாங்கம் 117 ரூபா வரை குறைத்திருந்தது.

உலக சந்தையில் ஒரு பீப்பாய் எரிபொருளின் விலை 77 டொலர் வரை அதிகரித்ததால் நல்லாட்சி அரசாங்கம் முதல் தடவையாக எரிபொருள் விலையை அதிகரித்துள்ளது.

எரிபொருள் விலை திருத்தம் காரணமாக, எரிபொருள் மானியத்திற்காக திறைசேரி செலவிட்ட 55 பில்லியன் ரூபாவுக்கு மேலான தொகையை சேமிக்கக்கூடியதாக இதுக்கும்.

இதனை 'கம்பெரலிய' என்ற புதிய கிராமிய அபிவிருத்தித் திட்டத்திற்காக பயன்படுத்தப் போவதாக நிதியமைச்சர் கூறினார்.