அமெரிக்காவில் தென் சூடான் பிரதிநிதியின் முள்ளிவாய்க்கால் நினைவுப் பேருரை

Report Print Gokulan Gokulan in அறிக்கை

தென் சூடான் விடுதலை வழிகோலி, பொதுவாக்கெடுப்பில் முக்கிய பங்காற்றிய லாடு ஜடா குபெக் மே 18 தமிழீழத் தேசிய துக்க நாளில் முள்ளிவாய்க்கால் நினைவுப் பேருரையின் ஆற்ற இருப்பதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்நிகழ்வு அமெரிக்காவின் பொஸ்ரன் நகரின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் (Harvard University Faculty Club, 20 Quincy Street, Cambridge, MA 02138, Boston, USA.) நாளை மறுதினம் மாலை 6 மணியளவில் இடம்பெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்காலில் தமிழ்த் தேசிய இனத்துக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனவழிப்பு, தமிழ் மக்களின் உள்ளத்தில் ஆறா வடுவாகப் பதிந்து விட்டது. அந்தக் கொடுநிகழ்வுகளை மறவாமல் நினைவிற்கொண்டு அவற்றிலிருந்து பாடம் கற்க வேண்டும் எனக் கருதுகிறோம்.

ஏனென்றால் வரலாற்றுக்கான போராட்டம் என்பது நிகழ்காலத்துக்கான போராட்டமும், இன்றைய நாளில் எமது மக்களுக்கான போராட்டமும் ஆகும் என்பதே உண்மை.

இந்தப் பின்னணியில்தான் 'முள்ளிவாய்க்கால் நினைவுச் சொற்பொழிவு' என்பது தொடங்கப் பெற்றது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வகையில் முன்னராக, 2015 மே 18ஆம் நாள் முதல் நினைவுச் சொற்பொழிவு நிகழ்த்தியவர் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் முன்னாள் அரசுச் சட்டத்தரணி ராம்சே கிளர்க் ஆவார்.

இரண்டாம் நினைவுச் சொற்பொழிவு நிகழ்த்தியவர் கிழக்கு திமோர் விடுதலைக்கு உதவிய அலன் நைன் ஆவார். மூன்றாம் நினைவுச் சொற்பொழிவு நிகழ்த்தியவர் கொசோவோ விடுதலையில் முக்கியப் பங்காற்றிய முனைவர் அலுஷ்காஷி ஆவார்.

இதன்வரிசையில் தற்போது தென் சூடான் பிரதிநிதியின் முள்ளிவாய்க்கால் நினைவுப் பேருரை என்பது, தமிழர் தலைவிதி தமிழர் கையில் எனும் பொதுவாக்கெடுப்பு நோக்கிய ஈழத்தமிழ் மக்களின் அரசியல் செயல்வழிப்பாதைக்கு வலுவூட்டுவதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.