குறுகிய நோக்கைக் கைவிடுத்து கூட்டணியைப் பலப்படுத்துவோம்: வேலுகுமார் எம்.பி

Report Print Rakesh in அறிக்கை

“மலையக சமூகத்தின் தனிப்பெரும் அரசியல் அமைப்பாக தமிழ் முற்போக்குக் கூட்டணி கட்டியெழுப்பப்படவேண்டும்.

கூட்டு கட்சிகள் தமது குறுகிய தொழிற்சங்க நோக்கிலிருந்து விடுபட்டு அரசியல் பலத்தை வலுப்படுத்திக்கொள்வதற்கு முன்னிற்கவேண்டும்.”

இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான வேலுகுமார் எம்.பி. தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“மலையக வரலாற்றில் பல அரசியல் கூட்டணிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அவை எந்தவொரு நோக்கையும் எட்டாது குறுகிய காலத்தில் பிரிந்து சென்றிருக்கின்றன.

இக்கூட்டணிகள் சமூக தேவையை அடிப்படையாகக்கொள்ளாது தமது கட்சிகளின் அரசியல் தேவையை அடிப்படையாகக்கொண்டே இருந்திருக்கின்றன. ஒன்று, தமது அரசியல் தேவை நிறைவேறியவுடன் கூட்டணி கழட்டிவிடப்பட்டிருக்கின்றது.

அல்லது கூட்டணிமூலம் தாம் நினைத்த அரசியல் தேவையை அடையமுடியாதுபோனதால் கூட்டணி கழட்டிவிடப்பட்டிருக்கின்றது. சமூக தேவைகளை அடைந்துகொள்வதற்காக எவ்வித முயற்சியும் விட்டுக்கொடுப்பும் இக்கூட்டணிகளில் காணப்படவில்லை.

அதனால் மலையக சமூகத்தின் ஒட்டுமொத்த அரசியல் பலத்தையும் ஒருபோதும் வெளிப்படுத்தமுடியாது போயிருக்கின்றது. இந்த இடைவெளியை நிரப்ப மலையக சமூகத்தின் தனிப்பெரும் அரசியல் அமைப்பாக தமிழ் முற்போக்குக் கூட்டணி கட்டியெழுப்பப்படவேண்டும்.

அதற்கு கூட்டு கட்சிகள் தமது குறுகிய தொழிற்சங்க நோக்கிலிருந்து விடுபட்டு அரசியல் பலத்தை வலுப்படுத்திக்கொள்வதற்கு முன்னிற்கவேண்டும்.

கடந்தகால மலையக அரசியல் கூட்டணிகளைப் போன்றல்லாது தமிழ் முற்போக்குக் கூட்டணி தமது ஸ்திரத்தன்மையை வெளிக்காட்டியிருக்கின்றது. அதன்படி பல்வேறு சவால்களையும் எதிர்கொண்டு தமது நான்காவது ஆண்டைக் கடந்திருக்கின்றது.

இக்காலப்பகுதியில் கூட்டுக் கட்சிகளான ஜனநாயக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய முன்னணி மற்றும் மலையக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் தலைவர்கள் மிகுந்த விட்டுக்கொடுப்புடன் செயற்பட்டு வந்திருக்கின்றார்கள்.

தமது கட்சிகளின் குறுகிய அரசியல் செயற்பாட்டுக்கப்பால் சென்று சமூகநலனை முன்னிறுத்தி செயற்பட்டிருக்கின்றார்கள். இந்த முன்னெடுப்பின் மூலம் மலையக சமூகம் அடைந்துகொள்ளமுடியாது தட்டித்தடுமாறிக்கொண்டிருந்த பல விடயங்களுக்கு தீர்வை எட்ட முடிந்திருக்கிறது.

சட்டபூர்வமான காணி உறுதியுடன் தனி வீடுகள், நுவரெலியா மாவட்டத்தின் உள்ளூராட்சி சபைகளின் அதிகரிப்பு, மலையகத்திற்கான தனியான அதிகாரசபை மற்றும் அனைத்து துறைசார்ந்த அமைச்சுகளின் செயற்பாடுகளும் மலையக தோட்டங்களுக்கு விஸ்தரிக்கப்பட்டுள்ளமை என சில முக்கிய விடயத்தை எடுத்துக்காட்டலாம்.

இவற்றைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு மலையக சமூகத்தைக் கட்டியெழுப்ப தமிழ் முற்போக்குக் கூட்டணி தனி ஓர் அரசியல் சக்தியாகக் கட்டியெழுப்பப்படவேண்டும். அதன்போதே மலையக சமூகத்தின் தேவைகளை விரைவுபடுத்தி அடைந்துகொள்ளமுடியும்.

எனவே, கட்சி சார்ந்த குறுகிய அரசியல் எண்ணங்கள், தொழிற்சங்க முன்னெடுப்புகள் போன்றவற்றை பின்தள்ளி சமூகநலனை முன்னிறுத்தி அனைத்துக் கட்சிகளின் தொண்டர்களும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும்.

அதன்மூலம் மலையக சமூகத்தின் ஒன்றிணைந்த தனிப்பெரும் அரசியல் சக்தியை வெளிப்படுத்தமுடியும். அரசிடம் கையேந்தாது எமது உரிமைகளை தட்டிக்கேட்டுப் பெறுவதற்கான ஒரே சக்தியாகவும் அது அமையும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.