கிழக்கு மாகாணத்தில் 2018 ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பாக 185 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் ஆணையாளர் சிவகெங்கா சுதீஸ்னர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,
சிறுவர் துஷ்பிரயோகங்கள் கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவில் இடம்பெற்றுள்ளன. போதைப்பொருட்களின் பாவனை காரணமாகவே அதிகளவில் துஷ்பிரயோக சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
இவ்வருடம் ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை திருகோணமலை மாவட்டத்தில் 37 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் 111 வழக்குகளும், அம்பாறை மாவட்டத்தில் 37 வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
மேலும், சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களை குறைக்கும் விதத்தில் கிராம மட்டங்களில் தெளிவூட்டல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. எனவே அதற்காக அனைவரும் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
அத்துடன், சிறுவர் தொடர்பாக பிரச்சினைகள் மற்றும் முறைப்பாடுகள் இருந்தால் எமது திணைக்களத்திற்கு அறிவிக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.