சிறைத்தண்டனை அனுபவித்து ஆயுதப் பயிற்சி பெற்ற சிங்களவர்கள் முல்லைத்தீவில் குடியேற்றம்

Report Print Thileepan Thileepan in அறிக்கை

வடக்கு - கிழக்கில் குறிப்பாக முல்லைத்தீவில் முன்னெடுக்கப்பட்டு வரும் சட்டவிரோத திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் இந்திய - இலங்கை ஒப்பந்தத்திற்கு முரணானது என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் விடுத்துள்ள ஊடக அறிக்கை வருமாறு,

“ஜே.ஆர். ஜெயவர்த்தன ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வடக்கு - கிழக்கின் நிலத்தொடர்பை துண்டிக்கும் விதமாக சிங்களக் குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டது. இதில் முக்கியமாக முல்லைத்தீவு மாவட்டத்திற்குள் உட்பட்டிருந்த 48 கிராமங்களை உள்ளடக்கிய வெலிஓயா பிரதேசத்தை அரசாங்கம் தமிழ் மக்களிடமிருந்து அடாத்தாகப் பறிப்பதற்கான சூழ்ச்சிகளை மேற்கொண்டது.

இந்தப் பிரதேசத்தில் பல்வேறுபட்ட கிராமங்களும் வயல் நிலங்களும் மத்தியதர வகுப்பினருக்கான பண்ணைகளுமாக முற்று முழுதாக தமிழ் மக்களின் வாழ்விடமாக அவை இருந்து வந்தன.

யுத்த காலத்தில் இங்கிருந்த பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் விரட்டப்பட்டு ஏதிலிகளாக மாற்றப்பட்டது மட்டுமல்லாமல் இப்பிரதேசம் முழுமையாக இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.

அப்போதைய நிர்வாக வசதிக்காக இப்பிரதேசம் அனுராதபுரம் மாவட்டத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டிற்குள்ளும் கொண்டு வரப்பட்டது. பின்னர், இந்த சமயத்தில் இப்பிரதேசம் மகாவலி அதிகாரசபைக்குள் உள்ளீர்க்கப்பட்டு மகாவலி 'எல்' வலயம் என்று குறிப்பிடப்பட்டது.

அதே நேரம் இப்பிரதேசத்தின் தமிழ்ப் பெயரான மணலாறு என்பது வெலிஓயா என்று சிங்களத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தமிழர்களை விரட்டி ஏதிலியாக்கியவர்கள் சிங்கள மக்களைக் குடியேற்றத் தொடங்கினார்கள்.

இதில் பலநூறு சிங்கள மக்கள் பல குற்றச்சாட்டிற்கு உள்ளாக்கப்பட்டு சிறைத் தண்டனை அனுபவித்து வந்த நிலையில் ஊர்காவற்துறையில் இணைத்துக்கொள்ளப்பட்டு ஆயுதப் பயிற்சிகள் அளிக்கப்பட்டதன் பின்னர் அப்பிரதேசத்தில் குடியேற்றப்பட்டவர்கள்.

வடக்கு - கிழக்கு இணைந்த தமிழர்களின் தாயகம் என்ற தமிழ் மக்களின் கோரிக்கையை இல்லாமல் செய்வதற்காக வடக்கு - கிழக்கு நிலத் தொடர்பை துண்டிப்பதே இவர்களது முக்கிய நோக்கமாக இருந்தது.

அது மட்டுமன்றி, அனுராதபுரத்தை தலைமையிடமாக கொண்ட வடமத்திய மாகாணத்திற்கு கடலுடனான தொடர்புகளும் தேவை என இதன் மூலம் நியாயப்படுத்தப்பட்டது.

இந்தப் பின்னணியில் இராணுவ பாதுகாப்புடனான சிங்களக் குடியேற்றங்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டது மட்டுமன்றி, வாழ்க்கையில் மகாவலி நீரே வரமுடியாத பிரதேசத்தை மகாவலி அபிவிருத்திச் சபைக்கு உள்ளிட்ட காணிகள் என அடையாளப்படுத்தியதுடன், கடற்கரை அண்டிய தமிழ் மக்களின் கரவலைப்பாடுகள்கூட இந்த மகாவலி அபிவிருத்தி சபையின் கீழ் கொண்டுவரக்கூடிய கேவலமான நிலையும் அரங்கேறியது.

வடக்கு - கிழக்கின் நிலத்தொடர்பை துண்டிக்கும் இவர்களின் வேலைத்திட்டம் யுத்த காலத்தில் பின்தள்ளப்பட்டிருந்தது. ஆனால் யுத்தம் முடிந்ததற்குப் பின்னர், தமிழ் மக்களிடமிருந்து பறித்தெடுத்த காணிகளை நிரந்தரமாக சிங்கள மக்களுக்கு வழங்கியது மாத்திரமல்லாமல், அதற்கான உறுதிகளையும் முன்னை நாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சிங்கள குடியேற்றவாசிகளுக்கு வழங்கிவைத்தார்.

இந்த நிலையில் தற்போது ஆட்சியிலுள்ள நல்லாட்சி அரசாங்கம் என்று சொல்லக்கூடிய மைத்திரி - ரணில் கூட்டு அரசாங்கமானது இதே நிகழ்ச்சி நிரலை தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதை நாம் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.

நாயாறு, கொக்கிளாய், கொக்குத்தொடுவாய் போன்ற பிரதேசங்களை உள்ளடக்கிய 2500 ஹெக்டெயருக்கும் மேற்பட்ட காணிகளை மகாவலி அபிவிருத்தி அதிகாரசபைக்குக் கொண்டு செல்வதன் மூலம் அங்குள்ள தமிழ் மக்களை விரட்டியடித்து, சிங்கள மக்களைக் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை இந்த அரசாங்கமும் மேற்கொண்டு வருகிறது.

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருக்கும் சிங்கள மீனவர்களை அங்கு தொடர்ச்சியாக வைத்திருப்பதற்கான அரச உதவிகளும் இராணுவ ஆதரவுகளும் தொடர்ந்தும் வழங்கப்பட்டு வருகின்றன.

இதேபோல் அம்மக்களுக்கான குடியிருப்புக் காணிகளை வழங்குவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. புதிதாக பௌத்த ஆலயங்களும் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.

16 கிராம சேவகர் பிரிவுடன் ஒரு புதிய பிரதேச செயலாளர் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இது தற்போதைய முல்லைத்தீவு மாவட்ட குடிசனப் பரம்பலிலும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

இத்தகைய செயற்பாடுகள் இவ்வளவு தூரம் நடைபெற்றும் கூட, சட்டவிரோதமான இந்த வேலைத்திட்டங்களை தடுத்து நிறுத்துவதற்கு நல்லாட்சி அரசாங்கத்துடன் இணக்க அரசியலில் ஈடுபட்டிருக்கும் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எத்தகைய முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர் என்ற வினா அனைவரிடமும் எழுந்துள்ளது.

மக்கள் பிரதிநிதிகள் என்ற அடிப்படையில் தமிழ் மக்களின் இருப்பையே கேள்விக்குட்படுத்தும் அரசாங்கத்தின் இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவதற்கான சகல நடவடிக்கைகளையும் நாடாளுமன்றத்தினூடாகவும், சர்வதேச சமூகத்தினூடாகவும் மேற்கொள்ள வேண்டிய பொறுப்பும் கடமையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு உண்டு.

அதுமட்டுமின்றி, தமிழ் மக்களின் இருப்பை காப்பாற்றுவதற்காக இந்திய-இலங்கை ஒப்பந்தத்தினூடு வடக்கு-கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு அது ஒரு மாகாணம் என்ற அந்தஸ்தையும் எட்டியது.

இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அறிமுக உரையிலேயே 'வடக்கு-கிழக்கு என்பது தமிழ் மக்களின் பாரம்பரிய வாழிடம்' என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆனால், இன்று இத்தகைய சட்டவிரோத சிங்களக் குடியேற்றத்தினூடாக வடக்கு-கிழக்கு நிலத்தொடர்பைத் துண்டிக்கும் விடயம் என்பது இந்திய - இலங்கை ஒப்பந்தத்திற்கும் விரோதமான ஒரு செயற்பாடாகும்.

ஆகவே, இவ்வாறான செயற்பாடுகளை இந்திய அரசு கண்டிப்பது மட்டுமன்றி, அதனைத் தடுத்து நிறுத்தவும் முன்வரவேண்டும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.