கனகராயன் குளம் பொலிஸ் நிலைய பொலிஸாருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்! செல்வம் அடைக்கலநாதன்

Report Print Ashik in அறிக்கை
60Shares

கனகராயன் குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட பொலிஸ் அலுவலர்கள் கடந்த 09ம் திகதி குறித்த பகுதியில் வசித்து வரும் தந்தையையும், பிள்ளைகளையும் தாக்கிய சம்பவமானது பொலிஸாரின் எதேச்சதிகார போக்கையும், பக்கச் சார்பான நிலைப்பாட்டையும் வெளிச்சமாக உணர்த்தியுள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்லம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியா கனகராயன் குளம் பகுதியில் இடம் பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் சம்மந்தப்பட்ட பொலிஸாருக்கு எதிராக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரி பொலிஸ்மா அதிபருக்கு இன்று அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இந்த விடயம் தொடர்பில் உடனடியாக தலையிட்டு சம்பந்தப்பட்ட பொலிஸாரின் மீது பாரபட்சமற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

கடந்த 9ம் திகதி இரவு கனகராயன் குளத்தில் ஒரு ஹோட்டல் உரிமையாளருக்கும், ஹோட்டல் காணி சொந்தக்காரருக்கும் இடையிலான பிணக்கு ஒன்றினை விசாரிக்க சிவில் உடையில் சென்ற பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினர் மிகவும் மிலேச்சதனமாக பொலிஸ் ஒழுக்க நெறிகளை மீறி ஒரு குடும்பத்தின் மொத்த உறுப்பினர்களையும் தாக்கிய சம்பவம் பொலிஸாரின் சட்டம் ஒழுங்கு பேணும் நிலைப்பாட்டிலிருந்து முற்றிலும் திசை மாறிச் செல்வதையே உணர்த்தி நிற்கின்றது.

ஒட்டு மொத்த பொலிஸாருக்கும் இது களங்கத்தை ஏற்படுத்தி சென்றிருக்கின்றது. மக்கள் பொலிஸார் மீது அவ நம்பிக்கையை கொண்டிருப்பதுடன் அச்சமும், பீதியும் நிறைந்த சூழலையும் உருவாக்கியிருக்கின்றது.

பொலிஸார் நடுநிலைமை தன்மையை மீறி, பக்கச் சார்பாக நடந்து கொள்வதாக நீதியை எதிர்பார்த்து நிற்கும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதன் நிமித்தம் இன்றைய தினம் பொலிஸ் நடவடிக்கைக்கு எதிராக பாரிய போராட்டம் ஒன்றும் மாணவர்கள், மக்கள் பிரதிநிதிகள், பொது மக்களின் பங்குபற்றலுடன் வவுனியாவில் நடத்தப்பட்டுள்ளது.

இதை சாதாரண ஒரு விடயமாக விட்டுச் செல்ல முடியவில்லை. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நீதி, நியாயம் பெற்றுக் கொடுக்கப்படாவிட்டால் எதிர் காலத்தில் முழுமையாக பொலிஸார் மீது எமது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை இழந்து விடுவார்கள்.

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியே தவறிழைத்திருப்பது அறியக் கூடியதாயிருப்பதால் மாவட்ட மட்டத்திலான விசாரணைக்கு மாவட்ட பொலிஸ் தலைமை கூட தயக்கம் காட்டுவதை அறியக் கூடியதாக இருக்கின்றது.

எனவே விஷேட விசாரணை அணியினை அமைத்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும், அவசரமானதும், உடனடியானதுமான நடவடிக்கையுடாக பொலிஸார் மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையை இச்சம்பவத்தோடும், விசாரணை முடிவிலும் உறுதிப்படுத்துமாறும் தங்களை தயவுடன் கேட்டுக் கொள்கின்றேன் என குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.