கிளிநொச்சியில் இடம்பெற்ற ஜே.வி,பியின் மக்கள் சந்திப்பு

Report Print Yathu in அறிக்கை
39Shares

மக்கள் விடுதலை முன்னணியின் மக்கள் சந்திப்பொன்று கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் இன்று பிற்பகல் 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பிற்கு மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க கலந்துகொண்டுள்ளார்.

கிளிநொச்சி பொதுச்சந்தையில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் அனுரகுமார திசாநாயக்க நேரில் சென்று பார்வையிட்டதுடன், வர்த்தகர்களுடனும் கலந்துரையாடியுள்ளார்.

தொடர்ந்து கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் இடம்பெற்ற “நாட்டை காக்கும் நாட்டை கட்டியெழுப்பும் மக்கள் நல ஆட்சி” என்ற தலைப்பில் மக்கள் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பில் அனுரகுமார மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரசேகர், அமைப்பாளர்கள், பொது மக்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.

நிகழ்வில் உரையாற்றிய அனுரகுமார, சிங்கப்பூர் பிரஜையான அர்ஜூன் மகேந்திரனுக்கு இலங்கை மத்திய வங்கியில் ரணில் விக்கிரமசிங்க முழு பொறுப்பளித்தமை தொடர்பிலும், மாமனும் மருமகனுமாக விற்றல் வாங்கல் மூலம் பல கோடி சம்பாதித்தமை தொடர்பிலும் கருத்து தெரிவித்துள்ளார்.

அதேவேளை அண்ணனின் ஆட்சி காலத்தில் அமெரிக்காவில் இருந்து இலங்கைக்கு வந்த பசில் ராஜபக்ச பல காணிகள், பல கோடி சொத்துக்கள் கொள்வனவு செய்தமை தொடர்பிலும் கருத்து தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாமல் ராஜபக்ச உள்ளிட்ட முன்னாள் ஜனாதிபதியின் உறவுகள் பெயரில் உள்ள சொத்துக்கள் தொடர்பிலும் அவர் இதன் போது குறிப்பிட்டுள்ளார்..

இவ்வாறு பல்வேறுபட்ட மோசடிகள் கடந்த ஆட்சி காலங்களில் இடம்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை இலங்கையில் கோடிக்கணக்கில் போதைப்பொருள் வியாபாரங்கள் இடம்பெறுகின்றன.

அதில் ஒருவரது வீடு சுற்றிவளைக்கப்பட்டபோது ஹெலிகொப்டரில் மகிந்தராஜபக்ச வீட்டுக்கு சென்று வீட்டில் உள்ள பொருட்களை எடுக்க வேண்டாம் என கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு நாட்டில் மாறி மாறி வந்த ஆட்சியாளர்களால் பல்வேறு மோசடிகளும், போதைப்பொருள் வியாபாரங்களுமே இடம்பெற்றுள்ளது.

கடன்களை பெற்றுக்கொள்வது தொடர்பிலும், மக்கள் கடன்களில் மூழ்கியுள்ளமை தொடர்பிலும் கருத்து தெரிவித்துள்ளார்.

கடன் காரணமாக பலர் தற்கொலை செய்துள்ளதாகவும், 30 ஆயிரம் பேர்வரை தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளதாகவும் அவர் இதன் போது குறிப்பிட்டார்.

இதேவேளை இனவாதம் தொடர்பிலும் கருத்து தெரிவித்தார். இனவாதத்தினால் எதையும் சாதிக்க முடியாது என்பது தொடர்பிலும் அவர் கருத்துக்கள் தெரிவித்துள்ளார்.

நிகழ்வில் உரையாற்றிய சந்திரசேகர் குறிப்பிடுகையில்,

கிளிநொச்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கறுப்பாக பெரிய மீசை வைத்தவாறு இருப்பார். அவர் 4 கோடி பெறுமதியான வாகனத்தை தென்னிலங்கையில் உள்ள வியாபாரி ஒருவரிடம் மூன்றரை கோடிக்கு விற்பனை செய்துள்ளார்.

இவ்வாறு அரசியலில் உள்ள அனைவரும் வியாபாரத்திற்காகவே பயன்படுத்துகின்றனர். முன்னைய காலங்களில் உலகலாவிய ரீதியில் தற்கொலை தாக்குதல் ஊடாக பலமாக இருந்த இந்த பகுதி மக்கள் கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்யும் அளவிற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

நுண்கடன்கள் பெண்களை இலக்கு வைத்து வழங்கப்படுவது தொடர்பிலும் அவர் இதன்போது தெரிவித்திருந்தார்.