மாபெரும் அனைத்துலக ரீதியான ஒன்றுகூடல்

Report Print Dias Dias in அறிக்கை

மாபெரும் அனைத்துலக ரீதியான சந்திப்பொன்று எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தமிழர் இயக்கம் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் அண்மையில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஈழத்தமிழர்கள் சுதந்திரமும், இறைமையுமுள்ள தமிழீழத் தனியரசை நிறுவி தமிழீழ மக்களை இனவழிப்பு செய்த சிறிலங்கா அரசிடமிருந்து பாதுகாத்து கொள்ளவே தமிழீழ விடுதலைப் போராட்டத்தை தமிழீழ விடுதலைப் புலிகளின் மாபெரும் தலைமைத்துவத்தின் கீழ் ஒருமித்து முன்னெடுத்தனர்.

இம் மாபெரும் இனவிடுதலைக்கான தமிழீழ மக்களின் புரட்சிகர விடுதலை போராட்டத்தின் 2009 இற்கு பிந்திய தற்போதைய காலகட்டத்தில் ஓர் சரியான விடுதலைக்கான இலக்கை நோக்கிய மூலோபாயத் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டியது எம் அனைவரது முன்னாலும் இருக்கின்ற பெரும்பணியாகும்.

கடந்த 9 வருடங்கள் போல் வினைக்கு எதிர்வினை ஆற்றல் என்ற நிகழ்ச்சி நிரலில் இப்போராட்டம் நகருமெனின், இனவழிப்பு யுத்தமொன்றின் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையில் தமிழர்கள் ஈட்டிய இறையாண்மையை அழித்த சிறிலங்கா அரசும் அதற்கு தன் நலன்சார் அடிப்படையில் முண்டுகொடுத்த வல்லாதிக்க சக்திகளும் தமிழர்களின் இனவிடுதலை போராட்டத்தை முற்றாக அனைத்துலக அரங்கிலிருந்து அழித்தொழிக்கும் வியூகங்களை வகுத்து செயற்படுத்தி வரும் இன்றைய காலகட்டத்தில் அதில் அவர்கள் எண்ணியவாறு வெற்றியுமெய்துவர்.

இத்தகைய ஓர் அபாயகரமான நிகழ்கால புறச்சூழலில் தமிழர்கள் அனைவரும் ஓர் மாபெரும் அரசியல் சக்தியாக கொள்கையடிப்படையில் தமிழீழத் தேசிய இறையாண்மையின் பால் அணிதிரள வேண்டிய வரலாற்று சூழமைவுக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

"தமிழீழம்" என்ற எமது இலக்கை அடையவேண்டுமெனில் நாம் எமது எதிர்கால நகர்வுகளை நோக்கி மூலோபாய சிந்தனைகளை வகுத்து செயற்பட வேண்டும்.

ஆனால் கடந்த 9 வருடங்களாக இப் பாரிய நோக்கை (போராட்டத்தை) முழுமையாக சிரமேற்கொண்டு செயற்படுத்தும் யாருமற்ற வெற்றிடத்தையே கடந்த 9 வருட வரலாறு எமக்கு கட்டியம் கூறி நிற்கின்றது.

இனியும் பொறுத்தால் அழித்தொழிக்கப்படுவோமென்கின்ற சூழ்நிலையில் தமிழர் இயக்கமாகிய நாம் ஓர் வரலாற்று முடிவை எடுக்க வேண்டிய சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டதை உணர்ந்து எதிர்வரும் 23ஆம் திகதி ஓர் மாபெரும் அனைத்துலக ரீதியான சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளோம்.

இந்த சந்திப்பானது முள்ளிவாய்க்காலில் விதையாகியவர்களின் கனவுகளோடும், நினைவுகளோடும் அவர்கள் எமக்களித்து சென்ற பொறுப்பை முன்னெடுத்துச் செல்வதற்கான ஓர் தொடர்ச்சியாகவே பார்க்கின்றோம்.

எமது இலக்கிற்காக தன்னலமற்று தம்மை அர்ப்பணிக்கத் தயாராக இருக்கும் அனைத்து பொது அமைப்புகளையும், தனி நபர்களையும், விடுதலை விரும்பிகளையும் உரிமையுடன் அழைத்து நிற்கின்றோம். இச்சந்திப்பில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் எதிர்காலத் திட்டம் தெளிவாக அறிவிக்கப்படும்.

இவ் வரலாற்றுச் சூழமைவில் நாம் ஏந்தியிருக்கும் இந்த தமிழீழ விடுதலைத் தீயிற்கு நீங்களும் வருகை தந்து தங்கள் தார்மீக ஆதரவை வழங்குமாறு அன்புரிமையுடன் அழைப்பு விடுக்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers