வடக்கில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் விபத்துக்களுக்கு இதுவே காரணம்?

Report Print Thileepan Thileepan in அறிக்கை

வடக்கின் புகையிரத கடவைகளில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் விபத்துக்களுக்கு புகையிரத திணைக்களத்தின் அசமந்தமே காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம் சாட்டியுள்ளார்.

வவுனியா - ஓமந்தை பகுதியில் பாதுகாப்பற்ற புகையிரத கடவையை கடந்து சென்ற கார் ஒன்றின் மீது புகையிரதம் மோதியதில் நான்கு பேர் பலியாகியதுடன், இருவர் படுகாயமடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கில் அண்மைக்காலமாக புகையிரத விபத்துக்கள் அதிகரித்துள்ளன. அதிலும் குறிப்பாக வவுனியா - ஓமந்தைக்கும், கிளிநொச்சிக்கும் இடைப்பட்ட பகுதிகளில் உள்ள புகையிரதக் கடவைகளில் பல விபத்துக்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்த பகுதிகளில் உள்ள பல புகையிரதக் கடவைகள் பாதுகாப்பற்றதாக இருப்பதுடன், புகையிரதக் கடவைகளில் காப்பாளர்களும் நியமிக்கப்படவில்லை. இதனாலேயே கடவைகளின் ஊடாக பயணிப்போர் புகையிரதத்தில் சிக்குண்டு விபத்திற்கு உள்ளாகின்றனர்.

தற்போது வவுனியா - ஓமந்தை, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் இடம்பெற்ற விபத்து கூட, பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையினாலேயே ஏற்பட்டுள்ளது.

குறித்த பகுதி ஊடாக பாடசாலை மாணவர்கள், விவசாயிகள், பொது மக்கள் எனப் பலரும் தினமும் பயணிக்கும் நிலையில் பாதுகாப்பான புகையிரதக் கடவை ஒன்றை அமைக்குமாறு மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்ததுடன், அதனை நானும் புகையிரதத் திணைக்களத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தேன்.

மாவட்டத்தில் இடம்பெற்ற பல ஒருங்கிணைப்பு குழுக்கூட்டங்களில் பாதுகாப்பான புகையிரதக் கடவைகள் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்திருந்தேன்.

குறிப்பாக கடந்த 3ஆம் திகதி வவுனியா மாவட்ட செயலகத்தில், வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் அமைச்சர் றிசாட் பதியுதீன் ஆகியோரின் இணைத்தலைமையில் நடந்த ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்திலும் குறித்த பகுதியில் பாதுகாப்பான புகையிரதக் கடவை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருந்தேன்.

இது தொடர்பில் கவனம் செலுத்துவதாகவும், புகையிரத திணைக்கள அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். ஆனால், எந்தவித நடவடிக்கையும் புகையிரத திணைக்களத்தால் மேற்கொள்ளப்படாத நிலையில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் மரணித்த உறவுகளுக்கு எனது அஞ்சலிகளை தெரிவித்து கொள்வதுடன், இவ்வாறான விபத்துக்களை இனிவரும் காலங்களில் தடுக்கும் வகையில் புகையிரத திணைக்களம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஏ9 வீதியிலும் அண்மைக்காலமாக விபத்துக்கள் அதிகமாக சம்பவிக்கின்றன. இதனை கட்டுப்படுத்த பொலிஸ் திணைக்களம், சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள் புதிய திட்டங்களை வகுத்து அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

Latest Offers

loading...