புலிக்கொடி, வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்டவர்களுக்கு உதவிய நபர்களின் வழக்கு ஒத்திவைப்பு

Report Print Yathu in அறிக்கை

ஒட்டுசுட்டான் பகுதியில் கடந்த ஜூன் மாதம் 22ஆம் திகதி புலிக்கொடி மற்றும் வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்ட முச்சக்கரவண்டி சாரதி உள்ளிட்டவர்களுக்கு உதவியதாக கைது செய்யப்பட்ட நால்வரின் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு விசாரணை முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் பதில் நீதிபதி ரி.பரஞ்சோதியின் முன்னிலையில் நேற்று எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து பொலிஸார் தரப்பில் இருந்து தொடர்ச்சியாக பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினரால் விசாரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த வழக்கானது எதிர்வரும் அக்டோபர் 01ஆம் திகதி நடைபெறும் என திகதியிடப்பட்டுள்ளது.

பயங்கரவாத குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில் குற்றவாளிகளுக்கு உதவியதாக கைது செய்யப்பட்ட ஏழு பேரில் விடுதலையாகியுள்ள மூவரில் பிணைவைக்காத நிலையில் உள்ள மிகுதி நால்வரின் வழக்கு விசாரணையே இவ்வாறு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஒரு இலட்சம் ரூபாவுடன் மூவர் ஆட்பிணையில் விடுதலை செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளதின் படி மூவர் பிணை வைத்து விடுதலையாகி உள்ளனர்.

பயங்கரவாத குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின் போது இவ் ஏழு பேர் கடந்த 12ம் திகதி அன்று கைது செய்யப்பட்டு கடந்த 13ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

இவர்கள் கிளிநொச்சி சாந்தபுரத்தினை சேர்ந்தவர்கள் என தகவல் பெறப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த வேளை பயங்கரவாத குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவினர் 09 பேரை கைது செய்து விசாரித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த மாதம் மேலும் இருவர் கைதாகிய நிலையில் நீதிமன்றில் ஒருவர் சரணடைந்துள்ளார். அவர்கள் நேற்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.