தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக யாழில் கவனயீர்ப்புப் போராட்டம்

Report Print Sumi in அறிக்கை

குறுகிய கால புனர்வாழ்வு வழங்கி விரைவில் விடுவிக்கவேண்டும் என கோரி போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக அவர்களின் உறவினர்கள் யாழில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்படவுள்ளனர்.

குறித்த போராட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 21.09.2018 அன்று முற்பகல் 10 மணியளவில் யாழ்.பிரதான பேருந்து நிலையத்திற்கு முன்பாக இடம்பெறவுள்ளதாக இன்று பொது அமைப்புக்களுடன் இணைந்து சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு அறிக்கை விடுத்துள்ளது.

சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் தலைவர் க. ஆனந்தக்குமாரசுவாமி, இணைச் செயலாளர்கள் ச. தனுஜன், அ. சீவரத்தினம் ஆகியோரால் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில், தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அரசியல் கைதிகளாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தங்களைக் குறுகிய கால புனர்வாழ்வு வழங்கி விரைவில் விடுவிக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருந்துவருகின்ற அரசியல் கைதிகளின் நியாயமான கோரிக்கையை அரசு உடனடியாக நிறைவேற்றவேண்டும்.

வருடக்கணக்கில் முறையான விசாரணையோ அல்லது விடுதலையோ இல்லாமல் தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் உயிர்களைக் காக்கவேண்டும்.

அனைத்து அரசியல் கைதிகளையும் நிபந்தனையற்ற வகையில் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை விலக்கிக்கொள்ள வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளனர்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி இடம்பெறவுள்ள இக் கவனயீர்ப்பில் அனைத்து அரசியல் கட்சிகள், வெகுஜன அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட மனிதாபிமானமுள்ள அனைவரையும் அணிதிரளுமாறு கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

பொது அமைப்புக்களுடன் இணைந்து சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் தலைவர் க. ஆனந்தக்குமாரசுவாமி, இணைச் செயலாளர்கள் ச. தனுஜன், அ. சீவரத்தினம் ஆகியோரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Latest Offers