கிழக்கு மாகாண கல்வித்தரத்தை புதிய அடைவுளை நோக்கி நகர்த்துமாறு கோரிக்கை

Report Print Rusath in அறிக்கை

தேசிய கல்வி மட்டத்தோடு ஒப்பிடுகையில் மிகவும் பின்னடைந்துள்ள கிழக்கு மாகாண கல்வித் தரத்தை புதிய அடைவுகளை நோக்கி நகர்த்த வேண்டிய தேவை, புலம்பெயர்ந்தோருக்கு இருப்பதாக கிழக்கு மாகாண தமிழாசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

கிழக்கு மாகாணத்தின் சமகாலக் கல்வி நிலை தொடர்பாக கிழக்கு மாகாண தமிழாசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சிவக்கொழுந்து ஜெயராசா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

குறித்த அறிக்கையில்,

'முன்னொரு காலத்தில் கல்வியில் கொடி கட்டிப் பறந்த வடக்கு, கிழக்கு மாகாணங்களின் கல்வித்தரம் வீழ்ச்சி அடைந்து வருவது கவலையளிக்கின்றது. வடக்கு கிழக்கு மாகாணங்கள் 3 தசாப்த காலமாக ஒரு அசாதாரண சூழ் நிலைகளுக்குள் கட்டுண்டு கிடந்தது.

அக்காலப் பகுதியில் சட்டம் ஒழுங்கு நிர்வாகம் என்பன சீர் குலைந்திருந்திருந்த போதிலும் சில அர்ப்பணிப்பான அணுகுமுறைகளைக் கடைப்பிடித்து வடக்கு கிழக்கின் கல்விச் செயற்பாடுகளை நகர்த்த வேண்டியிருந்தது.

அதிகஷ்டப் பிரதேசங்களிலும் கூட துப்பாக்கி வெடியோசைகள், குண்டுச் சத்தங்கள் ஆட்டிலறித் தாக்குதல்களுக்கு மத்தியில் கல்விச் செயற்பாடுகளை முன்னெடுத்து வந்த தியாக சேவையாளர்கள் இன்னமும் இருக்கிறார்கள்.

இவர்களும் தங்களது அர்ப்பணிப்புக்கான அங்கீகாரத்தை எதிர்பார்த்திருக்கிறார்கள். அத்தகையவர்களுக்கும் விமோசனம் கிடைக்க வழியேற்படுத்தப்பட வேண்டும்.

குறிப்பாக யுத்த காலத்திலும் தற்போது வரையிலும் பல்வேறு அரசியல் புறக்கணிப்புக்களுக்குள்ளாகிய நிலையில் தியாகத்துடன் எதுவித சலுகைகளோ பதவி உயர்வுகளோ இன்றி தங்களது வாழ்நாளை அர்ப்பணித்து சேவையாற்றிய கடமை நிறைவேற்று அதிபர்கள் மற்றும் அதிகாரிகள் (Performing Principals and Staffs) ஆகியோர் இங்கு கவனத்திற்கொள்ளப்பட வேண்டியவர்கள்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கல்விப் பின்னடைவு ஏற்பட்டதற்கு தசாப்தங்களாக ஒரே பாடசாலைகளில் கடமையாற்றும் அதிபர்களுக்கும், அலுவலகங்களில் கடமையாற்றும் கல்வி நிர்வாக அதிகாரிகளுக்கும் இடமாற்றங்கள் வழங்கப்படாமையும் ஒரு காரணமாக இருந்து வந்துள்ளது.

'கல்வி நிர்வாகத்தில் மேற்கொள்ளப்படும் பொதுவான இடமாற்றக்கொள்கை கடைப்பிடிக்கப்படாமையே இதற்குக் காரணமாகும்.

தசாப்தங்களாக பல பாடசாலைகளில் கடமையாற்றும், ஒரே அதிபர்கள், தாங்கள் ஓய்வூதியம் பெற்றுச்செல்லும் வரையிலும் கூட, அப்பாடசாலைகளிலேயே கடமையாற்றுகின்றார்கள் என்பது தெரிந்த விடயம்.

இவ்வாறே, கல்வி நிர்வாக சேவையிலுள்ள அதிகாரிகளின் நிலைமையும் இருக்கின்றது. கல்வி நிர்வாக சேவையில் இதுவொரு வெளிப்படையான அநீதியாகும்.

இடமாற்றத்துக்கான தேசிய கொள்கையை அல்லது மாகாணத்துக்கென்று தனித்துவமான கொள்கையை மாகாண நிர்வாகம் பின்பற்ற வேண்டும். ஆனால், இந்த இரண்டு கொள்கைகளும் இல்லாத காரணத்தால் வடக்கு, கிழக்கு மாகாணக் கல்வித்தரம் தற்போது பின்னடைவைச் சந்தித்துள்ளது எனவும் குறித்த அறிக்ககையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest Offers