வலுவடையும் தென்கிழக்கு வங்காள விரிகுடாப் பகுதியில் தோன்றியுள்ள தாழமுக்கம்

Report Print Kumar in அறிக்கை

தென்கிழக்கு வங்காள விரிகுடா பகுதியில் தோன்றியுள்ள தாழமுக்க வலயமானது வலுவடைந்து வருவதாக மட்டக்களப்பு நிலைய பெறுப்பதிகாரி கே.சூரியகுமார் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் இன்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

அராபியக்கடல் பிராந்தியத்தில் காணப்பட்ட வலுவடைந்த தாழமுக்கமானது கடந்த 6 மணித்தியாலத்தில் மணிக்கு 20 கிலோமீற்றர் வேகத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து கொண்டிருக்கிறது.

இது தற்போது சூறாவளியாக வலுவடைந்ததன் காரணமாக இதற்கு ஓமான் நாட்டினால் பரிந்துரை செய்யப்பட்ட லுவான் எனும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இது ஓமான் நாட்டின் சலாலா பிரதேசத்திலிருந்து கிழக்கு தென்கிழக்காக 1040 கிலோமீற்றர் தூரத்திலும், யெமன் நாட்டின் சொகொற்றா தீவிலிருந்து தென்கிழக்காக 920 கிலோமீற்றர் தூரத்திலும், லக்‌ஷ தீபத்திலிருந்து வடமேற்காக 1260 கிலோமீற்றர் தூரத்திலும் தற்போது காணப்படுகிறது.

இது மேலும் வலுவடைந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, தென் ஓமான் நாட்டிற்கும் யெமன் நாட்டின் கரையோர பிரதேசத்திற்கும் இடையில் அடுத்துவரும் 5 நாட்களில் கரையை ஊடறுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை அந்தமான் தீவிற்கு வடக்காக, தென்கிழக்கு வங்காளவிரிகுடா பகுதியில் தோன்றியுள்ள தாழமுக்க வலயமானது வலுவடைந்து கொண்டு வருகின்றது.

இது அடுத்த 25 மணி நேரத்தில் வலுவடைந்து, அதனையடுத்து வரும் 72 மணித்தியாலத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து, இந்தியாவின் ஒரிசா மாநிலத்தின் கரையை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers