இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி! வெளியானது 84 பக்கங்களுடைய புதிய அறிக்கை

Report Print Ajith Ajith in அறிக்கை

2009ம் ஆண்டு போர் முடிவடைந்த பின்னரும் இலங்கையில் படையினர் கைப்பற்றியிருந்த காணி மற்றும் பொதுமக்களின் சொத்துக்கள் இன்னும், பொதுமக்களின் கையளிக்கப்படுவதில் தாமதம் உள்ளதாக சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் இன்று குற்றம் சுமத்தியுள்ளது.

2015ம் ஆண்டு புதிய அரசாங்கம் பதவியேற்றப்போதும் தேசிய பாதுகாப்பை காரணம் காட்டி பொதுமக்களின் சொத்துக்களை மீளக்கையளிக்கும் விடயத்தில் தெளிவான கொள்கை கடைப்பிடிக்கப்படவில்லை என்று கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

கையகப்படுத்தப்பட்டுள்ள பல சொத்துக்களுக்கு படைத்தரப்பு நட்டஈடுகளை வழங்கவில்லை என்று கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

“ஏன் எங்களது வீடுகளுக்கு செல்லமுடியாது” என்ற தலைப்பில் 80 பக்க அறிக்கையை இன்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ளது.

2017ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 2018ம் ஆண்டு மே மாதம் வரையில் சுமார் 100பேரிடம் மேற்கொள்ளப்பட்ட நேர்காணலின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் பொதுமக்களின் காணிகள் அவர்களிடமே மீளமைக்கப்படும் என்று வழங்கிய உறுதிமொழியை அரசாங்கம் மீறியுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தென்னாசிய பணிப்பாளர் மீனாக்சி கங்குலி குற்றம் சுமத்தியுள்ளார்.

வடக்கு கிழக்கில் பொதுமக்களின் சொத்துக்கள் 2018ம் ஆண்டு டிசம்பர் 31ம் அதிகதிக்கு முன்னர் மீளக்கையளிக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி உத்தரவிட்டுள்ள நிலையிலேயே மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

காணிகளை மீள அளிப்பதில் அரசாங்கம் மந்த கதியில் இயங்குகின்றது! மனித உரிமை கண்காணிப்பகம்

போர் இடம்பெற்ற வலயத்தில் காணிகளை மீள ஒப்படைப்பதில் இலங்கை அரசாங்கம் மந்த கதியில் இயங்கி வருவதாக மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

2009ம் ஆண்டில் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் இன்னமும் சிவிலியன் காணிகள் உரிமையாளர்களிடம் முழுமையாக ஒப்படைக்கப்படவில்லை என மனித உரிமை கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணிகளை பொதுமக்களிடம் மீள ஒப்படைப்பதில் வெளிப்படைத்தன்மையை காண முடியவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

போர் இடம்பெற்ற வலயத்தில் தேசிய பாதுகாப்பு நோக்கத்திற்காக அன்றி வர்த்தக ரீதியான லாபமீட்டும் நோக்கிலும் அரசாங்கப் படையினர் சிவியலியன் காணிகளை தொடர்ந்தும் பயன்படுத்தி வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பயன்படுத்தப்படும் காணிகளின் உரிமையாளர்களுக்கு எவ்வித நட்டஈடோ, கொடுப்பனவுகளே வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர் காரணமாக இடம்பெயர்ந்த அனைத்து மக்களும் தங்களது சொந்த இடங்களுக்கு மீளச் சென்று குடியேறுவதற்கான உரிமையுடையவர்கள் என மனித உரிமை கண்காணிப்பகத்தின் தெற்காசிய பணிப்பாளர் மினாக்ஷி கங்குலி தெரிவித்துள்ளார்.

ஆட்சியாளர் தொடர்ச்சியாக வாக்குறுதி அளித்த போதிலும், படையினர் மிகவும் மந்த கதியிலேயே காணிகளை ஒப்படைக்கும் நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

போரினால் பாதிக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட நேர்காணலின் அடிப்படையில் மனித உரிமை கண்காணிப்பகம் 84 பக்கங்களைக் கொண்ட இந்த புதிய அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது.

பகுதி அளவில் காணிகளை விடுவித்தல் மற்றும் விடுவிக்கப்பட்ட பகுதிகளை அண்டிய பகுதிகளில் மித மிஞ்சிய அளவில் படையினரின் பிரசன்னம் என்பனவும் மக்களின் இயல்பு வாழ்க்கையை வெகுவாக பாதிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இராணுவத்தினர் காணிகளை ஆக்கிரமித்திருப்பதனால் மக்கள் எதிர்நோக்கி வரும் துன்பியல் அனுபவங்களை களைவதற்கு அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலதிக செய்தி - கமல்

Latest Offers