சுவிஸ் குமார் தப்பிச் சென்ற வழக்கு! ஶ்ரீகஜன் கைது செய்யப்பட வேண்டும்

Report Print Shalini in அறிக்கை

வித்தியா கொலையில் சுவிஸ் குமாரை தப்பிச் செல்ல இடமளித்த வழக்கின் இரண்டாவது சந்தேகநபரான முன்னாள் உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் ஶ்ரீகஜன் என்பவர் கைது செய்யப்பட வேண்டுமென மன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் நீதவான் ஏ.யூட்சன் முன்னிலையில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது இந்த கோரிக்கையை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் முன்வைத்துள்ளனர்.

இரண்டு கோடி ரூபா பணத்தை இலஞ்சமாகப் பெற்று சுவிஸ் குமாரை தப்பிச்செல்ல இடமளித்தமை தொடர்பில், முன்னாள் சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் அநுருத்த லலித் ஜயசிங்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கே இன்று விசாரணைக்கு வந்தது.

இதில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் ‘பி’ அறிக்கை ஒன்றை சமர்ப்பித்து, வழக்கின் இரண்டாவது சந்தேகநபரான முன்னாள் உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் ஶ்ரீகஜன் என்பவர் கைது செய்யப்பட வேண்டுமென தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் குறித்த வாதத்தை மறுதலித்து அநுருத்த லலித் ஜயசிங்கவிற்கு எதிராக எந்தக் குற்றச்சாட்டும் இதுவரை நிரூபிக்கப்படவில்லை எனவும், எனவே அவரை வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில் குறித்த வழக்கு விசாரணை தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனை இதுவரை கிடைக்கப்பெறவில்லை என நீதவான் ஏ.யூட்சன் கூறியுள்ளார்.

சட்டமா அதிபரின் ஆலோசனையை விரைவாகப் பெறுமாறும் இரண்டாவது சந்தேகநபர் இல்லாதவிடத்து வழக்கை தொடர்ந்து நடத்த முடியுமா என்பது தொடர்பில் ஆலோசனையைப் பெறுமாறும் குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.

மேலும் இந்த வழக்கு அடுத்த வருடம் ஜனவரி 30 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Latest Offers