நிராகரிக்கப்பட்டது அர்ஜூன் அலோசியஸின் மேன்முறையீட்டு மனு

Report Print Steephen Steephen in அறிக்கை

இலங்கை மத்திய வங்கியின் பிணை முறி விவகாரம் சம்பந்தமாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள பேர்பச்சுவல் ட்ரெசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் அந்த நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கசுன் பலிசேன ஆகியோர் தாக்கல் செய்திருந்த பிணை கோரிக்கை மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் பத்மன் சூரசேன மற்றும் நீதியரசர் ஷிரான் குணரத்ன ஆகியோர் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கக்கூடிய விசேடமான விடயங்கள் எதுவும் இல்லை என தீர்ப்பை வழங்கிய நீதியரசர் பத்மன் சூரசேன தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், சந்தேகநபர்களின் பிணை கோரிக்கையை நிராகரித்த கொழும்பு - கோட்டை நீதவான் நீதிமன்றம் மற்றும் கொழும்பு மேல் நீதிமன்றம் ஆகியவற்றின் முடிவை திருத்தம் செய்ய வேண்டியதில்லை என மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் தெரிவித்துள்ளனர்.

மத்திய வங்கியின் பிணை முறி விவகாரம் தொடர்பான குற்றப் புலனாய்வு திணைக்களம் தம்மை சந்தேகத்தின் பேரில் கைது செய்து கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியதாக மனுதாரர்கள் தமது மனுவில் கூறியிருந்தனர்.

குற்றப் புலனாய்வு திணைக்களம் தமக்கு எதிரான பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ் அறிக்கை தாக்கல் செய்துள்ளதாகவும், இதன் காரணமாக தமக்கு பிணை வழங்க கோட்டை நீதவான் நீதிமன்றம் மறுத்ததாகவும் தாம் பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் எந்த குற்றத்தையும் செய்யவில்லை என்பதால், கோட்டை நீதவான் நீதிமன்றம் மற்றும் கொழும்பு மேல் நீதிமன்றம் ஆகியன பிணை வழங்க மறுத்தமை சட்டத்திற்கு முரணானது எனவும் மனுதாரர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

இதனால், கோட்டை நீதவான் நீதிமன்றம் மற்றும் கொழும்பு மேல் நீதிமன்றம் தமக்கு பிணை மறுத்து வழங்கிய தீர்ப்பை திருத்தி, தம்மை பிணையில் விடுதலை செய்து உத்தரவிடுமாறு சந்தேகநபர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

Latest Offers