தகவல் சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் வழக்கு ஒத்திவைப்பு

Report Print Navoj in அறிக்கை

கல்குடா எத்தனோல் தொழிற்சாலை தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணை இன்று வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வழக்கு தொடர்பான விடயங்களை கேட்டறிந்து கொண்ட வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.றிஸ்வான், இவ்வழக்கினை எதிர்வரும் 31ஆம் திகதிக்கு ஒத்திவைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இவ்வழக்கினை கையாளும் நான்காவது சாட்சியான ஏறாவூர் பொலிஸ் உத்தியோகத்தர் நீதிமன்றுக்கு சமூகமளிக்காத காரணத்தினால் அவருக்கு எதிராக பிடியானை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, கல்குடாவில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற எத்தனோல் உற்பத்தி தொழிற்சாலை தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட சந்தேக நபர்கள் இருவர் நீதிமன்றில் ஆஜராகியிருந்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

கல்குடாவில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற எத்தனோல் உற்பத்தி தொழிற்சாலை தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மீது, கடந்த 2016 மார்ச் மாதம் 21ஆம் திகதி மதுபானசாலை உற்பத்தி நிலையத்திலுள்ள சிலரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பிராந்திய செய்தியாளர்களான புண்ணியமூர்த்தி சசிகரன், நல்லதம்பி நித்தியானந்தன் ஆகியோரே தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தனர்.

மதுபானசாலை உற்பத்திச் தொழிற்சாலையின் நிர்மாணப் பணிகள் இடம்பெற்று வருகின்ற இடத்திலிருந்த சிலர் ஊடகவியலாளர்களைத் தாக்கியுள்ளதுடன், சுமார் 6 கிலோமீற்றர் வரை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து அவர்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவதற்கு முயற்சித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers