இலங்கை நீதிமன்றினால் 60 லட்சம் அபராதம் விதிப்பு! வைகோ கண்டனம்

Report Print Murali Murali in அறிக்கை

இலங்கை நீதிமன்றினால் தமிழக மீனவர்களுக்க 60 லட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளமைக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தில் பொது செயலாளர் வைகோ கண்டனம் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து இன்று ஊடகங்களுக்கு அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த ஆகஸ்டு 21ஆம் திகதி, தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள், இந்திய கடற்பரப்பில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் மீது வழக்குத் தொடுத்து, இலங்கை கல்பிட்டி நீதிமன்றத்தில் நேர் நிறுத்தப்பட்டு, புத்தளம் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் கல்பிட்டி சுற்றுலா நீதிமன்றத்தில் அக்டோபர் 16ஆம் திகதி விசாரணை நடத்தப்பட்டு, தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய கடற் தொழில் சட்டத்தின் கீழ் குறித்த மீனவர்களுக்கு தலா ரூ.60 இலட்சம் அபராதம், மூன்று மாதம் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பு அளித்திருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது.

தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழிலை நசுக்கும் புதிய கடற்தொழில் சட்ட முன்வரைவு இலங்கை நாடாளுமன்றத்தில் முன் வைக்கப்பட்டபோதே, இந்திய அரசு தலையிட்டு திரும்பப் பெற வலியுறுத்த வேண்டும்

இது குறித்து 2016 டிசம்பர் 8ஆம் திகதியே நான் அறிக்கை வெளியிட்டேன். பின்னர் 2016 டிசம்பர் 15ஆம் திகதி, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் நேரில் சந்தித்து, இதே கருத்தை எடுத்துக்கூறி வலியுறுத்தினேன்.

தமிழக மீனவர்களை மிரட்டி, அச்சுறுத்தி மீன்பிடித் தொழிலைவிட்டே விரட்ட வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் இலங்கை அரசால் கொண்டுவரப்பட்ட இக்கொடிய சட்டத்தைத் இலங்கை அரசு திரும்பப் பெற இந்தியா அழுத்தம் தர வேண்டும் என்பதை வலியுறுத்தி, 2016 டிசம்பர் 16ஆம் திகதி இராமநாதபுரத்தில் எனது தலைமையில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடத்தினேன்.

இதன் பின்னர் 2017 மே 11ஆம் திகதி இலங்கை அரசின் அழைப்பின் பேரில் பிரதமர் நரேந்திர மோடி விசாக நாள் விழாவில் பங்கேற்க இலங்கை சென்றபோது, தமிழக மீனவர் நலனுக்கு எதிரான சட்ட முன்வடிவு குறித்து இலங்கை அரசிடம் இந்தியாவின் கவலையைத் தெரிவிப்பார் என்ற எதிர்பார்ப்பும் நிறைவேறவில்லை.

இலங்கையின் கருப்புச் சட்டத்திற்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 2017 ஜூலை 8ஆம் திகதி பிரதமர் மோடி அவர்களிடம் மீண்டும் கோரிக்கை வைத்தேன்.

இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய கடல்தொழில் சட்டம் நடைமுறைக்கு வந்தபோது பா.ஜ.க. அரசு, தமிழக மீனவர்களை இந்தியர்களாக கருதவில்லையா? என்று 2018 ஜனவரி 26 இல் கேள்வி எழுப்பினேன்.

தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியப்போக்குடன் நடந்துகொண்டு வரும் மத்திய பா.ஜ.க அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன்.

இந்திய அரசு உடனடியாக தலையிட்டு, தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் மீது இலங்கை அரசால் போடப்பட்டுள்ள வழக்கைத் திரும்பப் பெறச் செய்து, விடுதலை செய்திட உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன்” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.