நமது இலட்சிய நெருப்பு அணைந்து போகக்கூடாது! அருட்தந்தை தமிழ் நேசன்

Report Print Ashik in அறிக்கை

நமது இலட்சிய நெருப்பு ஒரு போதும் அணைந்து போகக்கூடாது என அருட்தந்தை தமிழ் நேசன் தெரிவித்துள்ளார்.

மாவீரர் நாள் தொடர்பில் அருட்தந்தை தமிழ் நேசன் அடிகளார் இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“விடுதலைக் கனவை இதயத்தில் தாங்கி சாவைத் தழுவிய சரித்திர நாயகர்களாம் மாவீரர்களை இன்று நாம் நெஞ்சிலிருத்தி அஞ்சலிக்கின்றோம்.

தியாக வேள்வியில் வெந்துருகிய இந்த மாவீரர்கள் நமது வணக்கத்திற்கும் மரியாதைக்கும் உரியவர்கள்.

மாவீரர்கள் இந்த உலகத்தைத் துறந்தவர்கள், வாழ்வின் வசந்தங்களைத் தொலைத்தவர்கள்.

இளமையின் இனிமைகளை நிராகரித்தவர்கள். சுதந்திர தேசம்பற்றிய கனவையே தம் கண்முன்கொண்டு ஓயாது ஓடிக்கொண்டிருந்தவர்கள்.

தமது உன்னதமான உயிரையே உவந்தளித்த இந்த உத்தமர்களுக்கு இன்று நாம் தலைசாய்த்து மரியாதை செய்வோம்.

தனது தாயக மக்கள் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க வேண்டும் என்பதற்காக களப்பலியான அனைவரையும் இன்று நாம் நினைவிலிருத்துவோம்.

வீரசுதந்திரம் வேண்டி வீறுகொண்டெழுந்து களப்பலியான எல்லா இயக்கங்களையும் சேர்ந்த வீரமறவர்களுக்கு இன்று நாம் வணக்கம் செலுத்துவோம்.

காலச்சுழற்சியில் நமது விடுதலைக் கனவுகள் எல்லாம் கலைந்துவிட்டதாக நாம் நினைக்கலாம்.

ஆனால் நமது இலட்சிய நெருப்பு அணைந்து போகக்கூடாது அது எரிந்து கொண்டு இருக்க வேண்டும்.

எந்தக் காரணங்களுக்காக அகிம்சைப் போராட்டமும் ஆயுதப்போராட்டமும் ஆரம்பிக்கப்பட்டதோ அந்தக் காரணங்கள் எல்லாம் இன்னமும் அப்படியே இருக்கின்றன.

தமிழர்களின் ஆயுதப்போராட்டத்தை அழித்துவிட்டோம் என்று கூறிவரும் சிறிலங்கா அரசாங்கங்கள் தமிழர்களின் அரசியல் பிரச்சினையைத் தீர்க்க இதயசுத்தியோடு எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.

இன்று ஆட்சியதிகாரத்தைப் பிடிக்க தமக்குள்ளே முட்டிமோதிக்கொண்டிருக்கின்றன.

போருக்குப் பின்னர் மேலெழுந்த பிரச்சினைகளான நில ஆக்கிரமிப்பு, அரசியல் கைதிகள், காணாமலாக்கப்பட்டோர் போன்றவை இன்னமும் தீர்க்கப்படாத பிரச்சினைகளாகவே தொடர்ந்துகொண்டு இருக்கின்றன.

எனவே தமிழர்களாகிய நாம் நமது விடுதலைக் கனவுகளை மீண்டும் கண்முன் வைத்து அரசியல் வழியில் - அகிம்சைப் பாதையில் தொடர்ந்தும் போராடுவோம்.

நமது இலக்குகளை அடைவதற்குரிய பொறிமுறைகளை வகுத்துக்கொள்வோம். நமக்குள்ளே இருக்கும் அரசியல் மற்றும் இன, மத, பிரதேச, சாதி வேற்றுமைகளைக் களைந்துவிடுவோம்.

ஒற்றமையே நமது பலம் என உணருவோம். இதுதான் மாவீரர்களுக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலியாக அமைய முடியும்” என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest Offers