அடாவடித்தனமாக பயிர்ச்செய்கையில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Report Print Ashik in அறிக்கை

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட பாலைக்குளி மற்றும் மூங்கில் முறிச்சான் நீரேந்தும் பகுதியில் தனி நபர்கள் இருவர் அடாத்தாக உழவினை மேற்கொண்டு விதைப்பினையும் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நடவடிக்கைகளுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பாலைக்குளி கமக்கார அமைப்பு, முருங்கன் செம்மண் தீவு நீர்ப்பாசன பொறியியலாளருக்கு எழுத்து மூலம் இன்று கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட பாலைக்குளி நீரேந்தும் பகுதியில் தனி நபர் ஒருவர் அடாத்தாக உழவினை மேற்கொண்டுள்ளார்.

இதேவேளை இத்திக்கண்டல் விவசாய அமைப்பின் பொருளாளர் மூங்கில் முறிச்சான் நீரேந்தும் பகுதியில் அடாத்தாக உழவினை மேற்கொண்டு தற்போது விதைப்பினையும் மேற்கொண்டுள்ளார். குறித்த நபர்கள் இரவு நேரங்களில் உழவினை மேற்கொண்டு வருகின்றனர்.

இவர்களின் அத்து மீறிய செயற்பாடுகளின் காரணமாக குறித்த குளத்தின் கீழ் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு நீரை குளத்தில் தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதோடு, பயிர் செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கும் முகம் கொடுத்து வருகின்றனர்.

எனவே அத்துமீறி விவசாய நடவடிக்கையில் ஈடுபட்ட நபர்களுக்கு எதிராக உடன் சட்டநடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பாலைக்குளி கமக்கார அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

கோரிக்கையினை ஏற்று கொண்ட முருங்கன் செம்மண் தீவு நீர்பாசன பொறியியலாளர் எதிர்வரும் 14ஆம் திகதிக்குள் குறித்த நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளார்.

Latest Offers