நீங்களே இலங்கையின் உண்மையான வீரர்! ஞானசார தேரருக்கு புகழாரம்

Report Print Murali Murali in அறிக்கை

இலங்கையின் உண்மையான வீரர் நீங்கள் தான் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு புகழாரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மியன்மாரில் இயங்கும் 969 பௌத்த அமைப்பின் தலைவர் அஷின் விராது தேரர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அத்துடன், மியன்மார் உங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது எனவும் அவர் கூறியுள்ளார்.

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு அனுப்பியுள்ள செய்தியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“எங்களுடைய நண்பர் ஞானசார தேரருக்கு ஒரு செய்தியைக் கூற விரும்புகின்றேன். தேசிய ரீதியான நோக்கம் ஒன்றுக்காக நீங்கள் உங்களது வாழ்க்கையையும் சுதந்திரத்தையும் ஆபத்தான நிலைக்கு உட்படுத்தியமை குறித்துப் பெருமையடைய வேண்டும்.

நாங்களும் எமது வாழ்வினை ஆபத்திற்குள் உட்படுத்தியிருக்கின்றோம். தமது வாழ்க்கையை தேசிய ரீதியான நலனுக்காக அர்ப்பணித்த அனைவரையும் மக்கள் நேசிப்பர்.

தேசிய வீரராகக் கருதி மதிப்பளிப்பர். ஆகையினால் நீங்கள் சிறையில் இருப்பதையிட்டு கவலையடையத் தேவையில்லை. இவ்விடயத்திற்காக நீங்கள் பெருமை கொள்வதுடன், மகிழ்ச்சியடைய வேண்டும்.

உங்களது உடல் ஆரோக்கியம் தொடர்பில் கவனம் செலுத்துங்கள். உங்களது விரைவான விடுதலையை நாங்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றௌம் என அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தோடு ஞானசார தேரருக்கு ஒரு நினைவுச்சின்னத்தையும் அனுப்பி வைத்துள்ள அஷின் விராது தேரர்இ அதில் 'உங்களது உடல் நலன் தொடர்பில் கவனம் செலுத்துங்கள்.

மனம் தளராது தொடர்ந்து போராடுங்கள். நாங்கள் அனைவரும் விரைவில் உங்களைச் சந்திப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம்” எனக் குறிப்பிட்டிருக்கின்றார்.