ஜனநாயகத்தின் காவலர் என்பதை நிரூபித்துள்ள சபாநாயகர்! கிழக்கிலிருந்து பாராட்டு

Report Print Rakesh in அறிக்கை

மாகாணசபை தேர்தலை பழைய முறையிலேயே நடத்துவதற்கு கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்க அம்சமென கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வெள்ளியன்று சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இது தொடர்பாக ஆராய்ந்து தீர்மானமெடுத்து, ஜனநாயகத்தின் காவலர் என்பதை சபாநாயகர் நிரூபித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும்,

மாகாணசபை தேர்தல் குறித்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் சில முடிவுகளை எடுக்க சபாநாயகர் முன்வந்துள்ளமை பாராட்டுக்குரியது. அவரது இந்த அணுகுமுறை குறித்து அவருக்கு எனது பாராட்டுகளை கடிதம் மூலம் தெரிவித்துள்ளேன்.

பழைய முறைமையில் மாகாணசபைகள் தேர்தல்களை நடத்த வேண்டுமெனில் இது தொடர்பாக அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட கட்டளைகள் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எனவே, துரிதகதியில் இதற்கான நடவடிக்கைகளை எடுக்க கட்சித் தலைமைகள் திடம் கொண்டு செயற்பட வேண்டும். இது குறித்து அமைச்சர் மனோ கணேசன் விரைவில் பிரேரணை ஒன்று கொண்டு வரப்படும் என தெரிவித்துள்ளமை பாராட்டுக்குரியது.

தற்போது திடீரென ஆளுநர்கள் நியமனங்கள் நடைபெற்றுள்ளன. இனியும் காலதாமதமின்றி மாகாணசபைகளின் தேர்தல்களை நடத்தி ஆளுநர்கள் அதிகாரங்கள் அரசாட்சி செய்யாமல் மக்கள் ஜனநாயகம் ஆட்சி செய்யும் நிலைமைகளை ஏற்படுத்த வேண்டும்.

கலைக்கப்பட்டுள்ள ஆறு மாகாணசபைகளும் ஜனநாயக ரீதியில் இயங்குவதற்கான நிலைகளின்றி ஸ்தம்பிதம் அடைந்து காணப்படுகின்றன. பொதுமக்கள் தமது தேவைகளை நிறைவு செய்ய முடியாது பெரும் சிரமங்களை அனுபவித்து வருகின்றனர்.

மாகாணமட்டத்திலுள்ள நிர்வாகங்கள் முறையான நடைமுறைகளின்றி தேக்கமுற்றுள்ளன. எனவே, துரிதகதியில் மாகாணசபைத் தேர்தலை நடத்தி மக்களின் ஜனநாயகம் நிலைநிறுத்தப்பட ஆவன செய்ய அனைத்து கட்சிகளினதும் தலைமைகளும் முன்வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.