வரவு செலவுத் திட்டத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு நன்மை கிடைக்குமா?

Report Print Thileepan Thileepan in அறிக்கை

எதிர்வரும் வரவு-செலவுத் திட்டத்தில் தமிழ் பிரதிநிதிகள் தமிழ் மக்கள் நலன்சார்ந்து முடிவெடுக்க வேண்டும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி வேண்டுகோள் விடுத்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் நேற்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அரசியல் பீட கூட்டம் கட்சியின் தலைவர் சுரேஷ். பிரேமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றுள்ளது.

இதன் போது நாட்டின் சமகால அரசியல் சூழல் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில்,

யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் மூன்றாம் திகதி யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறவுள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடிப்பது தொடர்பாகவும், அதனைத் தொடர்ந்து வன்னி மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாவட்ட மாநாடுகளை நடத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

ஆளுநர்கள் நியமனம், அதனைத் தொடர்ந்து வடக்கு, கிழக்கில் ஏற்பட கூடிய அரசியல் சூழல்கள், மார்ச் மாதம் வரவுள்ள வரவு-செலவுத் திட்டம் இவை தொடர்பில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை எடுக்க வேண்டிய நிலைப்பாடு, ஆகியவற்றுடன் வரவிருக்கும் வரவு-செலவுத் திட்டத்தில் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் எத்தகைய முடிவுகளை மேற்கொள்வது மக்களுக்கு நலன் பயக்கும் என்பது தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளது.

இதுவரை காலமும் புதியதொரு அரசியல் சாசனம் கொண்டு வரப்படும் என்றும் அது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என்றும் அதனூடாக தமிழ் மக்களின் பல பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவம் தமிழ் மக்களுக்குச் சொல்லிவந்தது.

ஆனால் இன்றிருக்க கூடிய சூழ்நிலையில், தேசிய அரசாங்கம் சிதைவடைந்து தனித்தனி வழியே செல்லும் போது, நாடாளுமன்றத்தில் புதியதொரு அரசியல் யாப்பிற்கான வரைபு சமர்ப்பிக்கப்பட்டாலும், அதில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ள மாட்டாது என்பதும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படமாட்டாது என்பதும் நிதர்சனமான உண்மையாக இருக்கின்றது.

இந்நிலையில், தொடர்ச்சியாக அரசியல் சாசனத்தைக் கொண்டுவருகிறோம் என்ற வாதத்தை நிறுத்தி, தமிழ் மக்களுக்கான ஏனைய பிரச்சினைகளுக்கான தீர்வைக் காண்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும், அதற்கு வரவுள்ள வரவு-செலவுத் திட்ட நிகழ்வை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கையாள வேண்டும் என்றும் கோரிக்கை விடுப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதுவரை காலமும் இந்த அரசாங்கத்திற்கு எந்தவித முன் நிபந்தனைகளும் இல்லாமல், சகல வரவு-செலவுத் திட்டங்களுக்கும் அரசாங்கத்தின் ஏனைய அனைத்து செயற்பாடுகளுக்கும் எமது கட்சியைத் தவிர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளித்து வந்துள்ளது.

ஆனால் தமிழ் மக்களின் எந்தப் பிரச்சினைக்கும் காத்திரமான தீர்வைக் காணமுடியவில்லை. வடக்கு மாகாணத்தில் மின்சாரசபை, பிரதேச சபைகள், யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் ஆகியவற்றின் சிற்றூழியர் பணிகளுக்கு கூட தென்பகுதி சிங்கள இளைஞர்கள் நியமிக்கப்படுகின்றார்கள்.

ஆனால், அதே தகுதிகளுடன் ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் வேலையின்றிருக்க, இத்தகைய நியமனங்களை அங்கீகரிக்க முடியாதென்றும், அவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தமிழ்ப் பிரதிநிதிகள் குறைந்த பட்சம் பின்வரும் விடயங்கள் தொடர்பில் காத்திரமான தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் என்று கோருவதாகவும் தீர்மானிக்கப்பட்டது.

இதனடிப்படையில், வரவு-செலவுத் திட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டுமாக இருந்தால்,

1.தமிழ் மக்களின் காணிகளை முழுமையாக விடுவிப்பது.

2.வனவளப் பாதுகாப்பு, மகாவலி அபிவிருத்தி, தொல்பொருள் மற்றும் அகழ்வாராய்ச்சி திணைக்களம், வனஜீவராசிகள் பாதுகாப்பு போன்ற திணைக்களங்கள் இவற்றுடன் முப்படைகளின் அடாத்தான காணி அபகரிப்பு என்பவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

3.அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும்.

4.காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் தாமதமின்றி நீதி வழங்குதல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து அதற்கு அரசாங்கம் ஆக்கபூர்வமான தீர்வைக் காண்பதற்கு முன்வரும் பட்சத்தில் அதற்கு ஆதரவளிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று கோருவதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விரைவில் மத்திய குழுவைக் கூட்டி தற்போதைய அரசியல் சூழலில் நாம் மேற்கொள்ள வேண்டிய அடுத்த நகர்வுகள் குறித்து ஆராய்வதாகவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையகத்தின் கூட்டத்தொடரைச் சமாளிப்பதற்கு இலங்கை அரசாங்கம் பல்வேறுபட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

அந்த வகையில்தான் நிறைவேற்றப்படாவிட்டாலும் நாடாளுமன்றத்தில் புதிய அரசியல் யாப்பிற்கான வரைபை சமர்ப்பிப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றது.

இந்த நிகழ்வுகளின் ஊடாக இலங்கை அரசாங்கம் ஒரு முன்னேற்றகரமான நடவடிக்கையை எடுப்பது போன்றும் 30/1, 34/1 தீர்மானங்களை நிறைவேற்றுவது போன்ற தோற்றப்பாட்டைக் காணப்பிப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றது.

இதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஆதரவாகச் செயற்படுகின்றது. இத்தகைய தமிழ் மக்களுக்கு விரோதமான செயற்பாடுகளை எமது கட்சி மக்களுக்குத் தெளிவுபடுத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது.

இதே நேரத்தில் அரசியல் பீட உறுப்பினர்கள் மரியாதை நிமித்தமாக முன்னாள் நீதியரசரும், வடக்கு மாகாணசபையின் முன்னாள் முதல்வரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வி விக்னேஸ்வரனை சந்தித்து இன்றையஅரசியல் சூழல் தொடர்பாகவும், நாங்கள் இணைந்து பணியாற்ற வேண்டிய பணிகள் தொடர்பாகவும் கலந்துரையாடினோம் என அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.