கோத்தபாயவின் நெருங்கிய சகாவிற்கு பதவி உயர்வை வழங்கிய மைத்திரி! வியப்பை ஏற்படுத்தியுள்ள செயல்

Report Print Ajith Ajith in அறிக்கை

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, இலங்கையின் இராணுவ பிரதம அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளமையை சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் கண்டித்துள்ளது.

அத்துடன் இலங்கையின் போர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள சவேந்திர சில்வா, வெளிநாடுகளுக்கு சென்றால் அங்கு போர் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கைது செய்யப்பட வேண்டும் என்றும் குறித்த திட்டம் கோரியுள்ளது.

திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மீன் சூக்கா இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

2009ஆம் ஆண்டு இலங்கையின் இறுதிப்போர் இடம்பெற்ற காலத்தில், வைத்தியசாலைகளின் மீது தாக்குதல் நடத்தியமை, ஆயிரக்கணக்கான மக்களின் உயிரிழப்புக்கள் மற்றும் வெள்ளை கொடிகளை ஏந்தி வந்த விடுதலைப் புலிகளின் இரண்டாம் கட்ட தலைவர்களை கொலை செய்தமை போன்ற சம்பவங்களில் சவேந்திர சில்வா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அவருக்கு தொடர்ந்தும் இராணுவத்தில் முக்கிய பதவி உயர்வுகள் வழங்கப்பட்டு தற்போது உயர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இது இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நல்லிணக்க நடவடிக்கைகளை குழப்பும் நடவடிக்கையாகும் என்றும் சூக்கா தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் நெருங்கிய சகாவான சவேந்திர சில்வாவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியுயர்வை வழங்கியமை, வியப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் சூக்கா சுட்டிக்காட்டியுள்ளார்.