அனைத்துப் பட்டதாரிகளையும் அரச நியமனத்திற்குள் உள்வாங்க வேண்டும்: ஸ்ரீநேசன்

Report Print Rusath in அறிக்கை

உள்வாரி, வெளிவாரி என்ற வித்தியாசமின்றி அனைத்துப் பட்டதாரிகளையும் அரச நியமனத்திற்குள் உள்வாங்கும் செயற்பாட்டை அரசாங்கம் துரிதப்படுத்த வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கிழக்கு மாகாணத்தில் தீர்க்கப்படாத பல்வேறு பிரச்சினைகள் இப்போதும் இருந்துகொண்டே இருக்கின்றன, அந்தவகையில் தற்போது முக்கியமானதொரு பிரச்சினையாக காணப்படுவது பட்டதாரிகளின் நியமனம் தொடர்பான பிரச்சினை.

கடந்த காலத்தில் பட்டதாரிகள் தங்களுக்கு தொழில்வாய்ப்பு தரவேண்டும் என்ற அடிப்படையில் மட்டக்களப்பிலும், காரைதீவிலும், திருகோணமலையிலும் நாட்டின் இன்னும் பல இடங்களிலும் சாத்வீக அடிப்படையில் பல்வேறு விதமான கவனயீர்ப்புப் போராட்டங்களை நடத்தியிருந்தார்கள்.

இதில் குறிப்பாக மட்டக்களப்பு காந்திப் பூங்கா முன்பாக தொடர்ச்சியாக சுமார் 154 நாட்களையும் தாண்டி போராட்டத்தை நடாத்தினர்.

இதன் அடிப்படையில் பட்டதாரிகளை பயிலுனர்களாக நியமித்து அவர்களுக்கு இரண்டு வருடம் பயிற்சிகளை அளித்ததன் பின்னர் நிரந்தர நியமனம் வழங்குவதாக கூறப்பட்டது, தொடர்ந்து பட்டதாரிகளுக்கான நேர்முகப் பரீட்சை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திலும் ஏனைய சில மாவட்ட செயலகங்களிலும் நடாத்தப்பட்டது.

இதன் போது பட்டதாரிகளை உள்வாரிப் பட்டதாரிகள், வெளிவாரிப் பட்டதாரிகள் என்று வகைப்படுத்திப் பார்க்காமல் அந்த நேர்முகப் பரீட்சை நடத்தப்பட்டு அவர்களுக்கு புள்ளிகளும் வழங்கப்பட்டிருந்தன.

அந்தவகையில் உள்வாரி, வெளிவாரி என்று பேதங்களில்லாமல் தமக்கு நியமனங்கள் கிடைக்கும் என்று இப்பட்டதாரிகள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

இவ்வாறிருக்கையில் உள்வாரிப் பட்டதாரிகளுக்கு மாத்திரம் நியமனங்கள் கொடுக்கப்பட்டிருந்தன அடுத்த கட்டத்தில் வெளிவாரிப் பட்டதாரிகளுக்கு நியமனங்கள் கொடுப்பதாகவும் உறுதி கூறப்பட்டிருந்தது.

அதேவேளை, இந்த முதல் கட்டத்தில் பட்டதாரி பயிலுனராக நியமனம் பெற்ற பட்டதாரிகள் தங்கள் பணித்தளத்தில் கடமைகளை செய்து வருகின்றனர்,

இரண்டாவது கட்டத்தில் பட்டதாரிகளை உள்வாங்கும்போது அதிலாவது வெளிவாரிப் பட்டதாரிகள் உள்வாங்கப்படுவார்கள் என்ற ஒரு கனதியான எதிர்பார்ப்புடன் வெளிவாரிப் பட்டதாரிகள் இருந்து வருகின்றனர்.

ஆனால் அரசாங்கத்தால் அந்த வெளிவாரிப் பட்டதாரிகள் பற்றிய சிந்தனைகள் இன்னும் கவனத்தில் கொண்டுவரப்படவில்லை என்பது போலத் தோன்றுகிறது. இந்த நிலைப்பாடு மிக வேதனைக்குரியது.

ஒருவகையில் பார்க்கின்றபோது இந்த உள்வாரி பட்டதாரிகளாக இருக்கலாம் வெளிவாரிப் பட்டதாரிகளாக இருக்கலாம் இரு சாராரும் இலங்கை அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் அந்த பல்கலைக் கழகங்களின் பாடத்திட்டப்படியே கற்று சித்தியடைந்து வந்துள்ளபோது வெளிவாரிப் பட்டதாரிகளை புறக்கணித்து செயற்படுவதென்பது அவர்களது தொழில் வாய்ப்பு பெறும் உரிமையை மீறுகின்ற செயலாக அமையலாம் என சிந்திக்கும் நிலையில் தற்போது அவர்கள் உள்ளனர்.

உள்வாரிப் பட்டதாரிகள் ஒரு தொகுதியினருக்கு தொழில் வாய்ப்புகள் வழங்கிய இந்த நிலையில் வெளிவாரிப் பட்டதாரிகள் எவருக்கும் தொழில்வாய்ப்பு வழங்கப்படாமல் இருப்பது என்பது அவர்களுக்கு ஒரு மன உழைச்சலை ஏற்படுத்துகின்ற செயற்பாடாக இருப்பது என்பது மட்டுமல்லாமல், இவர்கள் தமது வயது எல்லையினைக் கூட தாண்டிக்கொண்டிருக்கின்றார்கள்.

35 வயதுக்குட்பட்டவர்களுக்குத்தான், வேலை என சொல்லுகின்றபோது 2012 ஆம் ஆண்டிலிருந்து ஏறக்குறைய ஏழு வருடங்கள் பட்டங்களைப் பெற்றும் தொழில் இல்லாமல் இருப்பவர்களுக்கு இந்த வயது என்பது தடையாக அமைந்து அவர்கள் அந்த தொழில்வாய்ப்பை இழக்கக்கூடிய நிலமையில் இருக்கின்றார்கள்.

எனவே பொறுப்புள்ள நல்லாட்சி என்று கூறுகின்ற அரசாங்கம் உள்வாரி, வெளிவாரி என்ற பேதங்களைக் காட்டாமல் பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பை கொடுக்கக்கூடிய தங்களுடைய செயற்பாட்டை முன்னெடுக்கவேண்டும் என்பதுடன் இவர்களது வயதுக் கட்டுப்பாடுகள் 35 ஆக வகுக்கின்றபோது பலருக்கு தொழில் கிடைக்காத சந்தர்ப்பங்கள் ஏற்பட வாய்புள்ளது.

ஆகையால் வயதுக்கட்டுப்பாட்டை 45 ஆக மாற்றும் போது அது ஒரு சிறந்த செயற்பாடாக அமையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.