போதையற்ற நாட்டை உருவாக்குவோம் என பிரகடனபடுத்தியிருக்கும் ஜனாதிபதி ஆட்சியில் மதுப்பாவனையை அதிகரிக்க செய்ய, மதுபானசாலைகளுக்கு அனுமதி வழங்கும் நடவடிக்கைகளை வன்மையாக கண்டிப்பதோடு புதிதாக வழங்கபட்ட அனுமதிகளை உடன் ரத்து செய்யுமாறு சமூக நீதிக்கான வெகுஜனஅமைப்பின் வவுனியா மாவட்ட செயளாளர் சு.டொன்பொஸ்கோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அறிக்கையில் மேலும்,
வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் மதுபானசாலை அமைக்க அனுமதித்திருப்பது மிகவும் கண்டணத்திற்குரிய ஒன்றாகும்.
மக்களின் குடியிருப்பிற்கு மத்தியிலும் பொதுமக்கள் அதிகமாக வந்து செல்லும் பகுதியிலும், வைத்தியசாலை, மாவட்ட செயலகம், பிரதேச செயலகம் என்பவற்றிற்கு அருகாமையில் குறித்த மதுபானசாலையை அனுமதித்திருப்பது மது பாவனையை ஊக்கபடுத்துவதாகவே அமையும்.
வவுனியா நகர்புறத்தில் மாத்திரத்திரம் அன்றி வளர்ந்து வரும் கிராமமான ஓமந்தையிலும் மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
இது ஊர்தோரும் மதுபாவனையை பரவலாக்கும் செயற்பாடேயாகும். இது ஒரு மக்கள் விரோத செயற்பாடேயாகும்.
மதுபானசாலைகள் பெருகுவது ஒரு சில தனி நபர்கள் பணம் சேர்ப்பதற்கு உதவுமேயன்றி நாட்டுக்கோ, மக்களுக்கோ நன்மை பயக்காது. தீமையையே விளைவிக்கும்.
அரசுக்கு வருமானமாக மதுவரி கிடைக்கின்ற போதும் மதுவினால் ஏற்படும் நோய்களை குணமாக்க அரசு செலவிடும் மருத்துவ செலவு அதிகமானதாகும். எனவே மதுபானசாலைகள் அமைப்பதை அனுமதிக்க முடியாது.
புதிய மதுபானசாலைகளிற்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும். அத்துடன் பொதுமக்களிற்கு இடையூறாக அமைந்துள்ள மதுபானசாலைகளின் அனுமதிகள் ரத்து செய்யபட வேண்டும் என தெரிவிக்கபட்டுள்ளது.