லண்டனில் தமிழர்களை அச்சுறுத்திய இராணுவ அதிகாரியை காப்பாற்ற முயற்சி!

Report Print Vethu Vethu in அறிக்கை
716Shares

பிரித்தானியாவில் தமிழர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோவுக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஒன்று பிடியாணை பிறப்பித்துள்ளது.

நீதிமன்றத்தின் உத்தரவு பிரித்தானியாவிலுள்ள இலங்கை தூதரகம் மூலம் இலங்கை அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாக அந்நாட்டுக்கான சட்ட நிறுவனம் அறிவித்துள்ளது.

எனினும் அவ்வாறானதொரு அறிவித்தல்களும் தமக்கு கிடைக்கவில்லை என்று இராணுவ ஊடக பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்பத்து தெரிவித்துள்ளார்.

கடமையில் ஈடுபட்டுள்ள பிரியங்க பெர்ணான்டோவை, பிரித்தானிய நீதிமன்றில் ஆஜர்படுத்தப் போவதில்லை என ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் சுதந்திர தினத்தன்று லண்டனிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்னால் தமிழர்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்ட பிரிகேடியர் பெர்ணான்டோவை பிரித்தானிய நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்துள்ளது.

பொதுக்கட்டளைச் சட்டத்தின் 5 மற்றும் 4 ஏ பிரிவுகளின்படி, பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றமிழைத்துள்ளார் என்றும், அவரது செயற்பாடுகள், அச்சுறுத்தல் விடுக்கும் வகையில், துன்புறுத்தும் வகையில் அமைந்திருப்பதாகவும் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம் கூறியிருந்தது. இதற்கமைய, அவரைக் கைது செய்யுமாறும் பிரித்தானிய நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.