மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் நீதிமன்றத்தை நாடுவதை வரவேற்கும் முன்னாள் முதலமைச்சர்

Report Print Rakesh in அறிக்கை
60Shares

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் நீதிமன்றத்தை நாடுவதை கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் வரவேற்றுள்ளார்.

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் நீதிமன்றத்தை நாடவேண்டிய அவசியம் பற்றி தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மற்றும் முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் நிஸாம் காரியப்பர் உட்பட பலரும் தற்போது வலியுறுத்தியுள்ளனர்.

தொடர்ந்தும் இந்த விடயத்தில் தேக்க நிலைமை ஏற்படும் பட்சத்தில் நானும் நீதிமன்றத்தை நாடும் நடவடிக்கையை வரவேற்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் தலைவர்கள் கடந்த வியாழன் அன்று ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவைச் சந்தித்து மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது மாகாண சபைத் தேர்தலை புதிய முறையில் நடத்த முடியாத நிலைமை உள்ளது. எனவே, பழைய முறைமையில் நடத்தவதே பொருத்தமானது என அவர் கருத்துத் தெரிவித்ததோடு, நீதிமன்றம் உத்தரவிட்டால் நாம் தேர்தலை நடத்த முடியும்.எனவே, இந்த விடயத்தில் யாராவது நீமன்றத்தை நாட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்துள்ளார்.

அதேவேளை, இந்த நிலைமையை உணர்ந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நிஸாம் காரியப்பர், எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திற்கு முன்னர் தேர்தலை நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தவறின் அரசில் அங்கம் வகிக்கிக்கின்றோம் என்பதற்கு அப்பால் நாம் நீதிமன்றத்தை நாடுவோம் என உறுதிபடக் கூறியுள்ளமையும் வரவேற்கத்தக்கது.

மாகாண சபைத் தேர்தலை தாமதப்படுத்தும் நிலைப்பாடு ஐக்கிய தேசிய கட்சிக்கு தேவைப்படுகின்றது என்ற விமர்சனங்களே அதிகமாக வெளி வருகின்றன. அவற்றுக்கு கட்டியம் கூறும் வகையில் அதன் செயற்பாடுகளும் இருக்கின்றன.

எனவே, இந்த விடயத்தில் அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு விரைவாகத் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

தத்தமது வெற்றி வாய்ப்புகளைக் கருத்திற்கொண்டு செயற்படும் எதுவித நடவடிக்கைகளுக்கும் ஐனநாயகத்தை விரும்பும் எவரும் துணைபோகமாட்டர்கள் என்பதைக் கூறிவைக்க விரும்புகின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.