பொறுப்பு கூறுதல் விவகாரங்களில் முன்னேற்றம் பதிவாகாமை வருந்ததக்கது! சர்வதேச மன்னிப்புச் சபை

Report Print Kamel Kamel in அறிக்கை

பொறுப்பு கூறுதல் விவகாரங்களில் இலங்கையில் எவ்வித முன்னேற்றமும் பதிவாகாமை வருந்தத்தக்கது என சாவதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் இலங்கையின் நிலைமை குறித்து சர்வதேச மன்னிப்புச் சபை வருத்தம் வெளியிட்டுள்ளது.

இலங்கையில் போர் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டு எதிர்வரும் மே மாதத்துடன் பத்தாண்டுகள் பூர்த்தியாகும் நிலையில், குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல், உண்மை, நீதி, குற்றச் செயல்கள் மீள இடம்பெறுவதனை தடுத்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகள் திருப்தி கொள்ளும் வகையில் இல்லை என சுட்டிக்காட்டியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானம் அமுல்படுத்தப்படுவதனை சர்வதேச சமூகம் உறுதி செய்ய வேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசிய ஆய்வு பணிப்பாளர் தினுசிகா திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

குற்றச்செயல்களுக்கு பொறுப்பு கூறுதல், காலமாறு நீதிப் பொறிமுறைமையை அமல்படுத்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் ஓர் கால நிர்ணயத்தின் அடிப்படையில் செயற்பட வேண்டியது அவசியமானது என சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை படைத்தரப்பினால் கைப்பற்றப்பட்ட காணிகள் இன்னமும் அதன் உரிமையாளர்களிடம் முழுமையாக ஒப்படைக்கப்படவில்லை எனவும், இதனால் இன்னமும் குறித்த பகுதிகளை சேர்ந்த சமூகத்தினர் இடம்பெயர்ந்து வாழும் நிலைம நீடிக்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு நிறைவிற்குள் வடக்கு மக்களின் காணிகள் முழுமையாக ஒப்படைக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்ட போதிலும் அந்த உத்தரவு இதுவரையில் அமுல்படுத்தப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை, கொலை செய்யப்பட்டமை போன்ற சம்பவங்கள் தொடாபிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் இதுவரையில் குற்றச் செயல்களுடன் பொறுப்புடைய எவரும் தண்டிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

போர்க்குற்றச் செயல் மற்றும் மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றச் செயல்கள் தொடர்பிலான வழக்கு விசாரணைகளில் வெளிநாட்டு நீதிபதிகளையும் உள்ளடக்கிய கலப்பு நீதி விசாரணைப் பொறிமுறைமை ஒன்றை உருவாக்குவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை உறுதிமொழி வழங்கிய போதிலும் இன்று வரையில் அந்த உறுதிமொழி அமுல்படுத்தப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

Latest Offers

loading...