இலங்கையில் தலைதூக்கியுள்ள அபாயம்

Report Print Theesan in அறிக்கை

இலங்கையில் நீர்வெறுப்பு நோய் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் ச.சுகிர்தன் ஊடகங்களுக்கு இன்று அனுப்பியுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும், கடந்த வருடம் மே மாதத்திலிருந்து கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தினால் மிகவும் வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டு வருகின்ற நீர்வெறுப்பு நோயினை (விசர்நாய் கடி) தடை செய்யும் நிகழ்ச்சி திட்டத்தினை மீளவும் சுகாதார அமைச்சிற்கு உள்ளீர்ப்பதற்காக சுகாதார அமைச்சினால் அமைச்சரவை பத்திரம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சித் திட்டமானது கடந்த 65 வருடங்களாக சுகாதார அமைச்சினால் செயற்படுத்தப்பட்டு தோல்வியடைந்திருந்தது.

எனவே இதனை கருத்தில் கொண்டு ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் 2018ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி முதல் துறைசார் நிபுணர்களை கொண்டு இயங்கும் கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்திடம் வழங்கப்பட்டது.

இக்குறுகிய காலப்பகுதியில் 68 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாய்களுக்கான கருத்தடை சிகிச்சைகளும், 2600க்கும் மேற்பட்ட விழிப்புணர்வு கருத்தரங்குகளும் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டது.

அத்துடன் கடந்த வருடத்தில் விசர் நாய் கடிக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கையானது முன்னைய வருடங்களுடன் ஒப்பிடுகையில் கணிசமாக குறைந்துள்ளதுடன் கடந்தகாலங்களில் இலங்கையில் இருந்து Rinderpest எனும் நோய் முற்றுமுழுதாக கால்நடை வைத்தியர்களினால் அழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சுகாதார அமைச்சினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரம் விரைவில்மீளப் பெறப்படாத பட்சத்தில் மிகவும் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டிய சந்தர்ப்பம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers