விலங்கறுமனைகள், இறைச்சிக்கடைகள் ஆகியவற்றை மூடுவதற்கான உத்தரவு சட்ட விரோதமானது

Report Print Abdulsalam Yaseem in அறிக்கை

விலங்கறு மனைகள், இறைச்சிக்கடைகள் ஆகியவற்றை தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ மூடுவதற்கான உத்தரவானது சட்ட விரோதமானது என கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் பிரதிப்பணிப்பாளர் சுல்பிகார் அபூபக்கர் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களம் இன்று உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையொன்றிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கிழக்கு மாகாணத்தில் மாடுகளுக்குத் தொற்றுநோய்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அதன் காரணமாக மாடுகள் அதிகளவில் இறப்பதாகவும் அதன் காரணமாக விலங்கறுமனைகள் மற்றும் இறைச்சிக்கடைகள் ஆகியவற்றை மூடி விடுமாறு கிழக்கு மாகாணத்தின் (கிண்ணியா, மூதூர் மற்றும் தம்பலகாமம், ஏறாவூர், ஓட்டமாவடி, வாழைச்சேனை ஆகியவை உள்ளிட்ட) பல பிரதேசங்களின் சுகாதார வைத்திய அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்து வருவதாக பல்வேறு ஊடகங்கள், இணையத்தளங்கள் மற்றும் பொது மக்கள் மற்றும் ஏனைய பல பொது நிறுவனங்களாலும் எமது திணைக்களத்தின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

கால்நடைகளுக்குத் தொற்றுநோய்கள் ஏற்பட்டுள்ளமை காரணமாக விலங்கறுமனைகள் மற்றும் இறைச்சிக்கடைகள் ஆகியவற்றை தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ மூடும் அதிகாரம் சுகாதார வைத்திய அதிகாரிக்கோ, பொதுச்சுகாதார பரிசோதகர்களுக்கோ எந்தவித சட்டத்தின் கீழும் வழங்கப்படவில்லை.

அவர்களால் வழங்கப்பட்டுள்ள விலங்கறுமனைகள் மற்றும் இறைச்சிக்கடைகள் ஆகியவற்றை தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ மூடுவதற்கான உத்தரவானது சட்ட விரோதமானதும் தனது அதிகாரத்தை மீறும் செயல் எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கால்நடைகளுக்கு ஏற்படும் தொற்று நோய்கள் காரணமாக விலங்குகள் கொல்களத்தையோ அல்லது இறைச்சிக் கடைகளையோ மூடவேண்டுமா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் 1992 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க விலங்குநோய்கள் சட்டம் மற்றும் அதன் கீழ் ஆக்கப்பட்டு அதிவிஷேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்கு விதிகளின் பிரகாரம் கால்நடை உற்பத்தி சுகாதாரப் பணிப்பாளர் நாயகத்துக்கும், அவரால் அதிகாரமளிக்கப்பட்டுள்ள மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களப்பணிப்பாளருக்கும் மாத்திரமே உரித்தாக்கப்பட்டுள்ளது.

1992 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க விலங்குநோய்கள் சட்டத்தினதும் அதன் கீழ் ஆக்கப்பட்டு வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகளினதும், 1956 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க மிருகவைத்தியர்கள் சட்டத்தினதும் ஏற்பாடுகளின் பிரகாரம் மாடுகளுக்கு தொற்றுநோய்கள் ஏற்பட்டுள்ளதா அல்லது இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் அரசாங்க மிருகவைத்திய அதிகாரிகளுக்கு மாத்திரமே உரித்தாக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பிரதேசங்களில் மாடுகளுக்குத் தொற்று நோய் ஏற்பட்டு அதிகளவு மாடுகள் இறந்துள்ளதாக சுகாதாரவைத்திய அதிகாரிகளினாலும், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களாலும் செய்யப்பட்டுள்ள தகவல்கள் பொய்யானதும், தவறானதும், சட்ட விரோதமானதாகும்.

அவ்வாறு மாடுகளுக்கு ஏற்படும் தொற்று நோய்கள் காரணமாக ஏதேனும் பிரதேசத்தில் விலங்குகள் கொல்களத்தையோ அல்லது இறைச்சிக் கடைகளையோ மூடவேண்டியிருப்பின் அதற்கான கட்டளை 1992 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க விலங்குநோய்கள் சட்டத்தின் 5 ஆம் பிரிவின் கீழ் அல்லது 15 ஆம் பிரிவின் கீழ் கால்நடை உற்பத்தி சுகாதாரப் பணிப்பாளர் நாயகத்தால் அல்லது அவரால் அதிகாரமளிக்கப்பட்ட மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரப் பணிப்பாளரால் அதிவிஷேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்படல் வேண்டும்.

இதற்கு முன்னரும் இவ்வாறான வர்த்தமானி அறிவித்தல்கள் கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தால் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பிரதேசங்களில் மாடுகளுக்குத் தொற்று நோய் ஏற்பட்டு அதிகளவு மாடுகள் இறந்துள்ளதாக காரணம் காட்டி கிழக்கு மாகாணத்தின் பல பிரதேசதங்களின் சுகாதாரவைத்திய அதிகாரிகளினால் செய்யப்பட்டுள்ள பொய்யானதும், தவறானதும், சட்ட விரோதமானதுமான உத்தரவின் காரணமாக பொதுமக்கள் மத்தியிலும் கால்நடைப் ப​ண்ணையாளர்கள் மத்தியிலும் தேவையற்ற அச்சமும், பதற்ற நிலையும் ஏற்படுத்தியுள்ளதுடன் உலக விலங்கு சுகாதார நிறுவனத்திற்கு அறிக்கையிட வேண்டிய தர்ம சங்கடமான நிலையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கால்நடைகளுக்குப் போதியளவு உணவின்மை மற்றும் உணவுப்பற்றாக்குறை காரணமாகவும்,மேய்ச்சல் தரையின்மை காரணமாகவும் நிலவிய அசாதாரண காலநிலை காரணமாகவும் சில பிரதேசங்களில் கால்நடைகள் இறந்துள்ளன.

எனினும் கிழக்கு மாகாணத்தில் எந்தப் பிரதேசத்திலும் விலங்குகள் கொல்களத்தையோ அல்லது இறைச்சிக் கடைகளையோ மூடுவதற்கான கட்டளையைப் பிறப்பிக்கவேண்டிய அளவுக்கு மாடுகளுக்கு எதுவி​த தொற்றுநோய்களும் ஏற்பட்டதாக இதுவரை பிரகடனப்படுத்தப்படவி​ல்லை.

ஏதேனும் பிரதேசத்தில் மாடுகள் உள்ளிட்ட விலங்குகளுக்கு தொற்றுநோய்கள் ஏற்படுமிடத்து அது சம்பந்தமாக 1992 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க விலங்குநோய்கள் சட்டதின் ஏற்பாடுகளின் பிரகாரம் பிரதேசத்துக்குப் பொறுப்பான அரசாங்க மிருகவைத்திய அதிகாரியால் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

அத்தியாவசியமாகத் தேவையேற்படின் மாத்திரம் இதற்கு முன்னரும் கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்டது போன்று, 1992 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க விலங்குநோய்கள் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய விலங்குகள் கொல்களத்தையோ இறைச்சிக் கடைகளையோ மூட நடவடிக்கை எடுக்கப்படும்.

எனினும், தறபோதைய நிலையில் கிழக்கு மாகாணத்தின் எந்தவொரு பிரதேசத்திலும் கால்நடைகளுக்கு எதுவித தொற்று நோய்களும் ஏற்படவில்லையாதலால், கிழக்கு மாகாணத்தின் எந்தவொரு பிரதேசத்திலும் விலங்குகள் கொல்களத்தையோ இறைச்சிக் கடைகளையோ மூடவேண்டிய அவசியமில்லை.

எனவே சட்டவிரோதமாகவும், எதுவித அதிகாரமுமின்றி விலங்குகள்கொல்களம் மற்றும் இறைச்சிக்கடைகள் ஆகியவற்றை மூடுமாறு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகளால் வழங்கப்பட்ட கட்டளையை நிராகரித்து தங்களுடைய அதிகாரப் பிரதேசத்தில் உள்ள சகல விலங்குகள் கொல்களங்களையும், இறைச்சிக்கடைகளையும் வழமைபோல் திறந்து அவற்றின் நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதற்குரிய நடவடிக்கைகளை எடுக்குமாறும் அதன் மூலம் பொது மக்களின் இறைச்சித் தேவை நிறைவேற்றப்படுவதை உறுதிசெய்யுமாறும் உள்ளூராட்சி மன்றங்களையும், கால்நடைப் பண்ணையாளர்களையும், இறைச்சிக் கடைக்காரர்ளையும் தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

இவ்விடயத்தில் தங்களுக்குத் தேவையான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு இத்திணைக்களம் தயாராகவுள்ளது என்பதையும் தயவுடன் அறியத் தருகின்றேன்.

மேலும் ஆடு மாடுகளிலிருந்து மனிதர்களுக்கு இறைச்சி மூலமாகவோ அல்லது பால் மூலமாகவோ அல்லது வேறு வகையாகவோ மனிதர்களுக்கு தொற்றக் கூடிய எதுவித கால்நடைநோய்களும் இம்மாகாணத்தில் பதிவாகவில்லாத படியால் ஆட்டிறைச்சி மற்றும் மாட்டிறைச்சி ஆகியவற்றை அச்சமின்றி உட்கொள்ளலாம் என்பதையும் பொது மக்களுக்கு அறியத்தருகின்றேன் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த விடயமாக தகவல்கள், ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் பிரதிப்பணிப்பாளர் (தலைமையகம்) சுல்பிகார் அபூபக்கரை தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.