மனித உரிமைகள் சபைக்குள் தமிழர் இயக்கத்தின் தொடர்ச்சியான செயற்பாடுகள்!

Report Print Gokulan Gokulan in அறிக்கை

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் பிரதான அவையில், இம்முறையும் வாய்மூல அறிக்கைகள், எழுத்துமூல அறிக்கைகள் சமர்ப்பித்தல் மற்றும் பக்கவறை நிகழ்வுகளை ஒருங்கிணைத்தல், குறிப்பாக ஜெனீவாவை தளமாகக் கொண்டு இயங்கும் நாடுகளின் முக்கியஸ்தர்கள், பொது அமைப்புகள், ஐ.நா சபையின் ஏனைய நிறுவனங்கள் போன்றோரைச் சந்தித்து தமிழர்களிற்கான நீதியை வலியுறுத்தி அவர்களின் ஆதரவைத் திரட்டும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

ஐ.நா மனித உரிமைகள் சபையின் 40 ஆவது மனித உரிமைகள் கூட்டத் தொடர் கடந்த பெப்ரவரி மாதம் 25ஆம் திகதி ஆரம்பமான நிலையில் தொடர்ந்தும் மார்ச் மாதம் 22ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இது தொடர்பில் தமிழ் மக்களின் உரிமைகள் மற்றும் தொடரும் தமிழின அழிப்பிற்கு நீதி கோரி தமிழர் இயக்கம் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது,

குறித்த கூட்டத் தொடர் இடம்பெறும் காலங்களில் தமிழர் இயக்கமானது தமிழீழ மக்களின் உரிமைகள், குறிப்பாக தொடரும் தமிழின அழிப்பிற்கு எதிரான பன்னாட்டு நீதி விசாரணை, தமிழீழ மக்களின் இறையாண்மை மற்றும் சுயநிர்ணய உரிமை போன்ற விடயங்களை அனைத்துலக சமூகத்தின் முன்னிலையில் வலியுறுத்தி தொடர்ச்சியாக போராடி வருகின்றது.

எமது மக்களின் இவ் உரிமைக்கான போராட்டத்திற்கு வலுச்சேர்க்க தமிழீழம், தமிழகம் மற்றும் புலம்பெயர் நாடுகளிலிருந்து பாதிக்கப்பட்ட மக்கள், தமிழ் உரிமைச் செயற்பாட்டாளர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், தமிழ் புத்திஜீவிகள், இளையோர்கள், மாணவர்களென, ஈழத் தமிழர் உரிமைக்காக குரல் கொடுக்கும் உலகின் பல நாடுகளைச் சேர்ந்த வேற்றின மக்களும் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தினுள் கடந்த பல ஆண்டுகளாக மிகச் சிறந்த செயற்பாடுகளை முன் நகர்த்திச் செல்கின்றனர்.

அந்த வகையில் இம்முறையும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் பிரதான அவையில் வாய்மூல அறிக்கைகள், எழுத்துமூல அறிக்கைகள் சமர்ப்பித்தல் மற்றும் பக்கவறை நிகழ்வுகளை ஒருங்கிணைத்தல், குறிப்பாக ஜெனீவாவை தளமாகக் கொண்டு இயங்கும் நாடுகளின் முக்கியஸ்தர்கள், பொது அமைப்புகள், ஐ.நா சபையின் ஏனைய நிறுவனங்கள் போன்றோரைச் சந்தித்து தமிழர்களிற்கான நீதியை வலியுறுத்தி அவர்களின் ஆதரவைத் திரட்டுதல் போன்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இம்முறை எழுத்துமூல அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், பின்வரும் தலைப்புகளில் பக்கவறை நிகழ்வுகளும் ஒருங்கிணைக்கப்பட்டு இதுவரை நடாத்தப்பட்டுள்ளது.

அவையாவன:

  • - புதிய உலக ஒழுங்கின் கீழ் சுயநிர்ணய உரிமை
  • - சிறீ லங்காவின் பயங்கர வாதத்திற்கு எதிரான புதிய தடைச்சட்டமும் அதன் விளைவுகளும்
  • - சிறீலங்காவில் மனித உரிமையின் போக்கு
  • - இராணுவமயமாக்களிற்குள் அகப்பட்டுள்ள தேசங்கள்

அத்துடன் எதிர்வரும் காலங்களிலும் சிங்கள அரச பயங்கரவாதத்தால் தற்போது தாயகத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் பல முக்கிய விடயங்கள் சார்ந்த நிகழ்வுகளும் இடம்பெற இருக்கின்றது என்பதையும் இங்கு அறியத்தருகின்றோம் எனவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.