புதிய வன்முறைகளுக்கு வழி ஏற்படும்! இலங்கை குறித்து மனித உரிமைகள் ஆணையாளர் எச்சரிக்கை

Report Print Ajith Ajith in அறிக்கை

இலங்கை மனித உரிமைகள் விடய முன்னேற்றங்களில் பல குறைகள் உள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில் அவர் பிந்திய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் வேலைத்திட்டத்துடன் இலங்கை உறுதியாக செயற்படவேண்டும் என்று மிச்செய்ல் பெச்சலெட் வலியுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையும் இலங்கை விடயத்தில் உன்னிப்பான அவதானத்தை செலுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2015ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் யோசனைக்கு இலங்கையும் அனுசரணை வழங்கியுள்ளது.

எனவே அது இலங்கையில் சிறந்த எதிர்காலம் உருவாக திட்டங்களை முன்வைக்கவேண்டும். எனினும் முடிவில் தீர்மானங்களில் குறைபாடுகள் போன்ற காரணங்களினால் நிலையற்ற தன்மை உருவாக்கப்பட்டுள்ளதாக ஆணையாளர் குற்றம் சுமத்தியுள்ளார்.

பொறுப்புக்கூறலில் ஏற்பட்ட குறைகளே 2018ஆம் ஆண்டில் சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறைகள் உருவாக காரணமாக இருந்தன. அத்துடன் கடந்த ஒக்டோபரில் ஜனநாயகத்தை நசுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இலங்கை அரசாங்கம் சில இடங்களில் மனித உரிமைகள் விடயத்தில் சிறப்பாக செய்திருக்கிறது. எனினும் பல இடங்களில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

உரிய மூலோபாய திட்டங்கள் இன்மையே இதற்கான காரணமாகும். காணாமல் போனோர் அலுவலகம் இலங்கை அரசாங்கத்தை பொறுத்தவரை முக்கிய முன்னேற்ற செயற்பாடாகும்.

எனினும் அரசியலின் பங்களிப்புடன் தேசிய கலந்துரையாடல்கள் மற்றும் உண்மையை கண்டறிதல், உட்பட்ட பல விடயங்கள் நல்லிணக்கத்துக்கும் பொறுப்புக்கூறலுக்கும் வழியை ஏற்படுத்தும் என்று ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை பாரிய குற்றங்கள் தொடர்பில் விசேட வரப்பிரசாதங்கள் இலங்கையில் தொடருமாக இருந்தால் அது புதிய வன்முறைகளுக்கு வழிவகுக்கும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

பொறுப்புக்கூறல் விடயத்தில் சிவில் அமைப்புக்களும் சர்வதேசமும் தொடர்ந்தும் சர்வதேச நீதிபதிகள் உள்ளிட்ட நீதிப்பொறிமுறையை கோருகின்றன.

எனினும் இலங்கைக்கு உள்ளுர் பொறிமுறையை ஏற்படுத்த வழியேற்படுத்திக்கொடுக்கப்பட்டது. இதனை இலங்கை அரசாங்கம் பயன்படுத்திக்கொள்ளவில்லை.

இலங்கையின் வடக்கில் தொடர்ந்தும் பெண்கள் மற்றும் ஆண்கள் துன்புறுத்தப்படுதல், கடத்தல்கள், சித்திரவதை என்பன தொடர்கின்றன. அவை தொடர்பில் உரிய விசாரணைகள் அவசியமாகும்.

2019ஆம் ஆண்டில் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவ பிரதம அதிகாரியாக நியமிக்கப்பட்டமை தொடர்பில் ஆணையாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தநிலையில் மனித உரிமைகள் ஆணையாளர் தமது உத்தியோகபூர்வ அறிக்கையை எதிர்வரும் 20ஆம்(மார்ச்) திகதி சமர்ப்பிக்கவுள்ளார்.