மார்ச் 16 பேரணியில் அனைத்து தமிழ் மக்களும் கலந்து கொள்ள வேண்டும் என கோரிக்கை

Report Print Theesan in அறிக்கை
123Shares

யாழ். பல்கலை மாணவ சமூகத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள மார்ச் 16 பேரணியில் அனைத்து தமிழ் மக்களும் கலந்து கொண்டு, நடைபெற்ற இனவழிப்புக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் எதிராக குரல் கொடுக்க வேண்டும் என ஈரோஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவான ஈழவர் ஜனநாயக முன்னணி தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் இன்றைய தினம் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும்,

யுத்தம் முடிந்து பத்து வருடங்கள் கடக்கும் ஆண்டிலும் இதுவரை தமிழ் மக்களுக்கான தீர்வுக்கான முயற்சி இழுபறி நிலையில் தான் காணப்படுகின்றது.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக அவர்களை தேடியலையும் உறவுகள் தொடர்ந்தும் அலைக்கழிக்கப்படுகின்றனர்.

அவர்களை தேடும் போராட்டத்தில் ஈடுபட்ட தாய்மார்களில் இதுவரை 19 பேர் இறந்துள்ளனர். நீண்ட காலம் சிறையில் இருக்கும் அரசியல் கைதிகள் இற்றைவரை விடுதலை செய்யப்படவில்லை.

இராணுவ ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட தமிழ் மக்களின் வாழ்விடங்கள் இதுவரை விடுவிக்கப்படவில்லை.

மீள்குடியேற்றங்கள் முழுமையாக செயற்படுத்தவில்லை. யுத்தத்தால் உடல், உள ரீதியாக பாதிக்கப்பட்டோருக்கு இதுவரை முறையான மருத்துவ வசதி செய்து கொடுக்கவில்லை.

முன்னாள் போராளிகளின் தொழில் மற்றும் வாழ்வாதார திட்டங்கள் ஒழுங்குபடுத்தலில் அக்கரை செலுத்தவில்லை.

தமிழ் மக்களின் தொன்மைமிகு வழிபாட்டு நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வழிபாடு செய்ய தடை செய்யப்பட்டு புதிதாக புத்தர் சிலைகள் முளைத்தெழுகின்றன.

திட்டமிட்ட வகையில் தமிழர்கள் வாழும் பிரதேசங்களில் போதைப்பொருட்களின் பாவனை அதிகரிக்க ஊக்குவிக்கப்படுகிறது.

கல்விக் கூடங்களுக்கு அருகாமையில் சாராய விற்பனை நிலையங்கள் அமைக்க அனுமதி வழங்கப்படுகிறது.

இவ்வாறான தமிழ் மக்களின் கலைபண்பாட்டை, சமூக ஒழுக்க விழுமியங்களை சிதைக்கும் வகையில் செயற்படும் அரசின் போக்கை கண்டித்தும் இனப் பிரச்சனைக்கு விரைவாக தீர்வு காணுமாறு கோரியும் இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்குவதை கண்டித்தும் யாழ். பல்கலைக்கழக முன்றலில் இருந்து யாழ். முற்றவெளியை நோக்கிய கண்டன ஆர்ப்பாட்ட கவனயீர்ப்பு பேரணியில் எமது உரிமையை உலக அரங்கில் ஓங்கி ஒலிக்க குரல் கொடுக்க அனைவரையும்அழைக்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.