தமிழ் மக்கள் அனைவரையும் ஒன்றாக திரண்டு குரல் கொடுக்குமாறு அழைப்பு

Report Print Sumi in அறிக்கை
50Shares

எழுச்சிப் பேரணிக்கு தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றாக அணி திரண்டு குரல் கொடுக்க வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் நாளைய தினம் மேற்கொள்ளப்படவுள்ள போராட்டம் தொடர்பில் இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும்,

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுக்கும் எழுச்சிப் பேரணியில் கட்சி பேதம் பாராது தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றாக அணி திரண்டு குரல் கொடுக்க வேண்டும்.

யுத்தம் முடிந்து பத்து வருடங்கள் ஆகியும், தமிழ் மக்களின் கோரிக்கைககள் அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்கு போலாகிவிட்டது.

எமது மக்கள் வேதனையின் விளிம்பில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். யாரிடம் போய் எதைக் கேட்பது என்ற விரக்தியில் துவண்டு போய் விட்டார்கள். இந்த எழுச்சிப் பேரணியாவது சம்பந்தப்பட்டவர்களின் காதுகளுக்குப் போய் சேரட்டும்.

இழக்கக்கூடாதவற்றை எல்லாம் இழந்துவிட்டு, இழப்பதற்கு எஞ்சி உயிரைத் தவர வேறெதுவும் இல்லை என்று ஏங்கி தவிக்கும் மக்களின் வேதனைகள் தீரட்டும்.

எனவே இதில் நான் பெரிது, நீ பெரிது என பாராமல் எமது நாடும், மக்களும் பெரிது என்ற எண்ணத்தில் அனைவரும் செயற்பட்டு, நாளைய தினம் முன்னெடுக்கும் இந்த எழுச்சிப் பேரணியில் கலந்து கொண்டு, அகிம்சை பேராட்டத்திற்கு ஆதரவு கொடுத்து, சர்வதேசத்திற்கு உண்மையை உணர்த்துவோம் என கூறப்பட்டுள்ளது.