இலங்கையில் தொடரும் மனிதாபிமானத்திற்கு அப்பாற்பட்ட கொடுமையான விடயம்

Report Print Kumar in அறிக்கை

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினதும், பாதிக்கப்பட்ட மக்களினதும் நீதிக்கான குரலுக்கு அங்கீகாரமும், தீர்வும் கிடைக்க வேண்டும் என மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் ம.நிஸ்கானந்தராஜா தெரிவித்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் மேற்கொள்ளப்படவுள்ள கடையடைப்பு மற்றும் பேரணிக்கு ஆதரவளிக்கும் வகையிலான ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில்,

எதிர்வரும் 19ஆம் திகதி தமிழர் தாயகப் பகுதிகளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தினரால் மேற்கொள்ளப்படவுள்ள கடையடைப்பு மற்றும் புறக்கணிப்பு நடவடிக்கைகளுக்கு ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) தனது முழுமையான ஆதரவினை வழங்குவதோடு தனது பங்களிப்பையும் வழங்கவுள்ளது.

போர் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு பத்து ஆண்டுகள் கடக்கவுள்ள நிலையில் இன்னமும் தமது உறவுகளைத் தேடி அலையும் கொடுமை மனிதாபிமானத்திற்கு அப்பாற்பட்ட விடயம்.

குறிப்பாக யுத்த நடவடிக்கைகள் முடிவுற்ற பின்பு அகதி முகாம்களில் படை அதிகாரிகளின் கைகளில் கையளிக்கப்பட்ட அப்பாவி இளைஞர்களை, உறவுகளைத் தேடி அலைவதும், இன்றுவரை ஆட்சி புரிந்த அரசாங்கங்கள் அனைத்தும் எதுவுமே நடக்காதது போல் பொறுப்பின்றி கையை விரிப்பதும் ஏற்றுக் கொள்ள முடியாதவை.

போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் இலங்கை அரசுக்கு காத்திரமான ஆதரவை வழங்கிய ஐ.நா நிறுவனங்களும், சர்வதேச நாடுகளும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியும், நிவாரணமும் கிடைப்பதை இதுவரை காலமும் உறுதிப்படுத்த முடியாத நிலையில் இருப்பதும், அதற்கான போதியளவு அழுத்தங்களை இலங்கை அரசு மீது பிரயோகிக்காமல் இருப்பதும் தமிழ் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட முடியாமல் உள்ளது.

தொடர்ச்சியான தன்னெழுச்சியான போராட்டங்களையும், கவனயீர்ப்புப் போராட்டங்களையும் முன்னெடுத்துவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினதும், பாதிக்கப்பட்ட மக்களினதும் நீதிக்கான குரலுக்கு அங்கீகாரமும், தீர்வும் கிடைக்க வேண்டும் என்பதே நம் அனைவரதும் முயற்சியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest Offers