பயனாளிகளுக்கான நிதியில் ஒரு பகுதி சுய விளம்பரத்திற்கு! யாழ். அரசாங்க அதிபருக்கு கடிதம்

Report Print Sumi in அறிக்கை

பயனாளிகளுக்கு சென்றடைய வேண்டிய நிதியில் ஒரு பகுதி சுய விளம்பரத்திற்காக செலவிடப்படுவதாக வட மாகாணசபையின் முன்னாள் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகனுக்கு நேற்றைய தினம் அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அந்த கடிதத்தில் மேலும்,

தற்போது யாழ்ப்பாண மாவட்டத்தில் அமுல் செய்யப்படும் கம்பெரலிய திட்டத்தின் கீழ் நிறைவேற்றப்படும் ஒவ்வொரு திட்டம் தொடர்பாக அந்தந்த இடங்களில் ஜனாதிபதி, பிரதம மந்திரி, விடய அமைச்சர் மற்றும் தொடர்புடைய நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோரது பெயர் மற்றும் புபை்படங்களை கொண்ட விளம்பரங்கள் பொருத்தப்படுவதாக அறியப்படுகிறது.

இந்த விளம்பர பலகைக்கான செலவு அந்தந்த திட்ட செலவுக்குள்ளேயே மேற்கொள்ளப்படுவதாகவும் அறியப்படுகின்றது. எனவே பயனாளிகளுக்கு சென்றடைய வேண்டிய ஒரு பகுதி நிதி இவர்களது சுய விளம்பரத்துக்காக மக்கள் பணம் வீண் விரயம் செய்யப்படுகின்றமையை காணக்கூடியதாக உள்ளது.

உதாரணமாக ஒரு விளையாட்டுக்கழகத்துக்கு முப்பதாயிரம் ரூபா (30,000) ஒதுக்கிடும் போது அதில் ஏழாயிரம் ரூபா (7,000) வரை இந்த விளம்பரத்துக்காக ஒதுக்கி கொண்டு மிகுதி இருபத்தி மூன்றாயிரம் ரூபாவே (23,000) பயனாளி கழகத்தை சென்றடைகிறது.

இது ஒரு பொது நிதி முறைகேடாக பார்க்கப்படல் வேண்டும். அப்படியான ஒரு கருத்தை அரசாங்க தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க அண்மையில் தெரிவித்தமை கவனிக்கப்படல் வேண்டும்.

எனவே இந்த பொது நிதி விரயத்தை யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள அமுலாக்க அமைப்புக்களான பிரதேச செயலகங்கள் மற்றும் பிரதேச சபைகள் தவிர்த்தல் வேண்டும் என்ற முன்மொழிவு எதிர்வரும் 08.04.2019 ஆம் திகதி நடைபெறும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் பரிசீலிக்கப்பட வேண்டும் என கோரப்படுகிறது.