யாழ். பல்கலைக்கழகத்தில் இந்து கற்கைநெறிக்கான புதிய பீடம்! மகிழ்ச்சியின் உச்சத்தில் மூத்த கல்வியியலாளர்கள்

Report Print Tamilini in அறிக்கை

இந்து நாகரிகத் துறை, சைவ சித்தாந்தத் துறை, சமஸ்கிருதத் துறை ஆகியன உள்ளடங்கலாக யாழ். பல்கலைக் கழகத்தில் பதினோராவது பீடமாக இந்து கற்கைகள் பீடம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

மார்ச் 18ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள 2115/5 ஆம் இலக்க அதி விஷேட அரசிதழ் மூலம் இதற்கான அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக் கழகங்கள் சட்டத்தின் 27 (1) ஆம் பிரிவின் கீழ் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதந்துரைக்கமைவாக உயர்கல்வி அமைச்சர் ஏ. இபதுல் ரவூஃப் ஹக்கீம் இதில் கையொப்பமிட்டுள்ளார்.

இந்த அறிவித்தலின் படி யாழ். பல்கலைக் கழகத்தில் தொழில் நுட்ப பீடத்தை அடுத்து 11ஆவது பீடமாக இந்து கற்கைகள் பீடம் அமையவுள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தை நிறுவிய காலத்தில் இருந்தே இந்து நாகரிகத்துறைக்கென தனியான பீடமொன்றை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தது. எனினும், அந்த முயற்சி இன்றுதான் வெற்றி பெற்றுள்ளது.

மேலும், சேர். பொன். இராமநாதனின் கனவு இப்போது தான் மெய்பட காலம் கனிந்துள்ளது என மூத்த கல்வியியலாளர்கள் மகிழ்சியடைந்துள்ளனர்.

இதேவேளை, இந்து கற்கைகளுக்கு தனியான பீடம் அமைக்கப்படவேண்டும் என்று யாழ்.பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் பொன் பாலசுந்தரம்பிள்ளை நீண்டகாலமாக பல்வேறு தரப்பினரிடம் வலியுறுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.