தற்கொலைதாரிகள் வெறும் அம்புகளே! எய்தவர்கள் யார்??

Report Print Navoj in அறிக்கை

இன, மதப்பற்று மற்றும் அரசியற் கொள்கைகளுக்கு அப்பால், நாட்டின் அமைதி, அச்சமற்ற வாழ்வு, ஜனநாயக வெளிப்படுத்துகைக்கான வாய்ப்பு என்பவற்றில் ஒவ்வொருவரும் அக்கறை கொண்டு செற்பட வேண்டும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார்.

பொது இடங்கள் மற்றும், வர்த்தக நிலையங்களில் மக்கள் கறுப்புக் கொடி கட்டி அனுதாபத்தை வெளிப்படுத்துமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நேற்றைய தினம் நாட்டில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் வெளியிடப்பட்ட அனுதாப மற்றும் கண்டன அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

அமைதி குலைக்கப்பட்டிருக்கின்றது. அப்பாவி மக்கள் பலியாக்கப்பட்டுள்ளார்கள். கிறிஸ்தவ ஆலயங்கள் முக்கிய இலக்காக்கப்பட்டுள்ளன. வழிபாட்டுக்காகச் சென்ற மக்கள் மீது இந்த வன்கொலைத் தாண்டவம் இடம்பெற்றுள்ளது. யார் இதைச் செய்தார்கள், ஏன் இப்படிச் செய்தார்கள்?

எல்லா இடங்களிலும் தற்கொலைக் குண்டுகள் வெடித்துள்ளன. தற்கொலைதாரிகள் வெறும் அம்புகளே அவர்கள் வெறி ஊட்டப்பட்டவர்கள் அல்லது, தியாகம் எனும் மாயையில் வீழ்த்தப்பட்டவர்கள். அது எதற்கான தியாகம் என்று வெளிப்படுத்தப்படவில்லை. எய்தவர்கள் தாம் யார் என்றும், ஏன் இதைச் செய்தார்கள் என்றும் வெளிப்படுத்த வேண்டும்.

இது உள்ளுர் சக்தியா, வெளிநாட்டு சக்தியா என்பதும் தெரியவில்லை. வெளிநாட்டு சக்தி என்றால், இலங்கையை ஏன் இவர்கள் இத்தகைய துன்பியல் களமாக்கியுள்ளார்கள். என்னதான் விமர்சனம் இருந்தாலும் 2015 ஜனவரி 08க்குப் பின் இலங்கையில் ஜனநாயக நடவடிக்கைகளுக்கு வாய்ப்புக்கள் இறுக்கமாக இருக்கவில்லை. ஒரு குறுகிய காலத்துக்குள், மக்கள் மனதில் மீண்டும் அச்சமும், நம்பிக்கையீனமும் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

முதலிலே நாடு என்ற ரீதியில் ஜனநாயகப் பண்புகள் மீண்டும் மீளுருக்கொள்ள அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

துன்பியலுக்குள் வீழ்த்தப்பட்ட அத்தனை குடும்பங்களுக்கும், அவர்தம் உறவினர்களுக்கும் எமது கட்சியின் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். நான் மட்டக்களப்பைச் சேர்ந்தவன் என்பதால் குறிப்பாக மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் நிகழ்ந்த துன்பியலில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு எங்கள் அனுதாபங்கள் உரித்தாகட்டும்.

மட்டக்களப்பு மக்கள், பொது இடங்கள், கடைகள் என்பவற்றில் கறுப்புக் கொடிகளைக் கட்டி எமது அனுதாபத்தை வெளிப்படுத்துவோம் எனவும் தெரிவித்துள்ளார்.