கிழக்கில் இஸ்லாமிய பாடசாலைகளில் கற்பிக்கும் தமிழ் ஆசிரியர்கள் உடன் இடமாற்றப்பட வேண்டும்

Report Print Nesan Nesan in அறிக்கை

கிழக்கு மாகாண இஸ்லாமிய பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் தமிழ் ஆசிரியர்களை உடனடியாக இடமாற்றுவது தொடர்பில் கல்வி அமைச்சு கவனம் செலுத்த வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் பொன்னுத்துரை உதயரூபன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்படி விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும்,

கிழக்கு மாகாண தமிழ் மொழி பாடசாலைகளில் கடமையாற்றிய சுமார் 100 இற்கும் மேற்பட்ட இஸ்லாமிய ஆசிரியர்கள் பதிலாளின்றி மனித பாதுகாப்பு கருதி தற்காலிக இடமாற்றம் பெற்று சென்று இருப்பதினால் தமிழ் மொழி பாடசாலைகளில் உள்ள மாணாவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு பெரும் பாதிப்பினையும், கல்குடா, மேற்கு கல்வி வலயங்களில் கடும் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்றது.

மேலும் அன்மையில் வெளியாகிய க.பொ.த.(சா.த) பரீட்சையில் கல்குடா, மேற்கு கல்வி வலயங்கள் முன்னேற்றமான நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கும் வேளையில், இவ் ஆசிரியர்கள் பதிலாளின்றி தற்காலிக இடமாற்றம் பெற்றிருப்பது கண்டிக்கத்தக்கது.

மேலும் பட்டிருப்பு கல்வி வலயமானது தேசிய ரீதியில் 91ஆவது நிலையில் மிக மோசமான கல்வி பின்னடைவை சந்தித்துள்ள வேளை பெருமளவான ஆசிரியர்கள் பதிலாளின்றி இடமாற்றம் பெற்றுள்ளார்கள்.

இவ் ஆசிரியர்களின் இடமாற்றங்களை கருத்தில் கொண்டும் ஆசிரியர்களின் மனித பாதுகாப்பினை கவனத்தில் கொண்டும் இஸ்லாமிய பாடசாலைகளில் சேவையில் உள்ள தமிழ் ஆசிரியர்களை குறிக்கப்பட்ட வலயங்களுக்கு இடமாற்றம் செய்வதற்கு மத்திய, மாகாண கல்வியமைச்சுக்கள் முன் வரவேண்டும்.

பெரும் அச்சத்தின் மத்தியில் காத்தான்குடியில் தேசிய, மாகாண பாடசாலைகளில் சேவையில் உள்ள தமிழ் மொழியிலான ஆசிரியர்களின் மனித பாதுகாப்பினை உயர்வாக கருத்தில் கொண்டும், கல்முனை கல்வி வலயத்தில் இருந்து மத்திய கல்வி வலயத்திற்கு பயணிக்கும் பெரும்பாலான தமிழ் ஆசிரியர்கள் சோதணைச் சாவடிகளில் அசௌகரியங்களை எதிர் நோக்குவதினை கருத்தில் கொண்டும் அருகில் உள்ள பட்டிருப்பு, மேற்கு கல்வி வலயங்களுக்கு இடமாற்றம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

பல்லின சமூக கட்டமைப்பை கொண்டதும், பல்லின சமூக கலாச்சார விழுமியங்களை கொண்டதுமான கிழக்கு மாகாண கல்வி பெரும் பின்னிடைவை சந்தித்துள்ள வேளை, சில அரசியல்வாதிகளின் அரசியல் நிரல்களினால் தரமான கல்வி பெரும் சவாலை எதிர்நோக்கியுள்ளது.

இதேவேளை நேற்று மத்திய கல்வியமைச்சின் இடமாற்றக் கிளையின் பணிப்பாளருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தேசிய பாடசாலைகளின் ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பான நிலைமையை விளக்கியுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers