ஐரோப்பிய ஒன்றியம் அரசாங்கத்திடம் விடுத்துள்ள கோரிக்கை!

Report Print Murali Murali in அறிக்கை

சமூக வன்முறைகள் இடம்பெறும் சகல சந்தர்ப்பங்களிலும், குற்றச் செயல்களை புரிந்தவர்கள் மற்றும் தூண்டியவர்கள் மேல் சட்டம் சமமான முறையில் பிரயோகிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கையினை அரசாங்கத்திடம் விடுப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, ரொமேனியா தூதரகங்கள் மற்றும் ஐக்கிய இராஜ்ஜிய உயர் ஸ்தானிகராலயம், நோர்வே மற்றும் சுவிட்சர்லாந்து தூதரகங்கள் ஆகியவற்றுடனான உடன்படிக்கையின் பிரகாரம் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களை தொடர்ந்து இடம்பெற்ற அண்மைய சமூக வன்முறைகள் தொடர்பில் நாம் அதிகளவு கரிசனை கொண்டுள்ளோம்.

இந்த வன்முறைகளுடன் தொடர்புபட்டவர்களை கைது செய்தமையை நாம் வரவேற்பதுடன், சட்டவிதிமுறையை எவ்வேளையிலும் பேணுமாறு அரசாங்கத்துக்கு நாம் கோரிக்கை விடுப்பதுடன், சமூக வன்முறைகள் இடம்பெறும் சகல சந்தர்ப்பங்களிலும் சட்டம், குற்றச் செயல்களை புரிந்தவர்கள் மற்றும் தூண்டியவர்கள் மேல் சமமான முறையில் பிரயோகிக்கப்படுவதை உறுதி செய்யுமாறும் கோரிக்கை விடுக்கின்றோம்.

பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் அண்மைக் காலங்களில் பயங்கரவாதத் தாக்குதல்களையும் வெறுப்பு குற்றங்களையும் அனுபவித்துள்ளன.

இவற்றின் காரணமாக சமூகங்களில் ஏற்படும் தாக்கங்கள் மற்றும் நீண்ட கால அடிப்படையில் இது போன்ற சம்பவங்கள் இடம்பெறுகின்றமை நாட்டின் சமூக பரம்பலில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதை நாம் புரிந்து கொண்டுள்ளோம்.

தெளிவான தலைமைத்துவம் மற்றும் வெறுப்புணர்வு மற்றும் வன்முறையை நிராகரிக்கும் செயற்பாடுகள் போன்றன மிகவும் முக்கியத்துவமானவை என்பதுடன், நாட்டின் குடிமக்கள் அனைவரின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான சகல செயற்பாடுகளையும் முன்னெடுத்து, அவர்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளை பாதுகாப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என அரசாங்கத்தை நாம் ஊக்குவிக்கின்றோம்.

தொடர்ந்து வன்முறை கிளர்ச்சியை தூண்டுதல் அத்துடன் அவநம்பிக்கையை ஏற்படுத்தல் என்பவற்றிற்கு எதிராக குரலெழுப்புமாறு நாம் சகல அரசியல், சமய மற்றும் இதர சமூக தலைவர்களிடமும் கோரிக்கைவிடுப்பதுடன், சமூகங்களுக்கிடையே நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்துவதற்கான செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் கோரிக்கை விடுக்கின்றோம்.

தவறான தகவல்களை பரப்பி, மேலும் வன்முறைகளை தூண்டாமல் இருக்க வேண்டியது நாட்டின் ஊடகங்கள் மற்றும் குடிமக்கள் ஆகியோரின் பொறுப்பு என்பதையும் குறிப்பிடுகின்றோம்” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.