தமிழர் விடுதலையை நெஞ்சிலிருத்தி உயிர் கொடுத்தோரை அஞ்சலிப்போம்! மாவை சேனாதிராஜா எம்.பி. அழைப்பு

Report Print Rakesh in அறிக்கை

“தமிழர் விடுதலையை நெஞ்சிலிருத்தி அதற்காய் உயிர் கொடுத்த, களப்பலியாகிவிட்ட உத்தமருக்கு அஞ்சலி செய்யும் ஒரே எண்ணத்துடன் அமைதி காத்துச் செயற்படுவோம். ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் ஈமக்கடன் செய்வதிலும் ஆழ்ந்த பற்றுறுதியுடன் அர்ப்பணித்துச் செயலாற்றுவோம்.”

இவ்வாறு முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமானமாவை சேனாதிராஜா.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“இலங்கையில் தமிழினம் சுதந்திரத்திற்காகவும் தன் அரசாட்சியை மீட்டெடுக்கவும், நிலைநாட்டவும் அறுபதாண்டு இனப் போரில் - குறிப்பாக இறுதிப் போரில் களப் பலியாகிய இலட்சக்கணக்கான உயிர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்து, ஆராதித்து, அஞ்சலி செலுத்தும் நாள் - நினைவேந்தல் நிகழ்வு இவ்வாண்டிலும் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நிகழ்கின்றது.

தமிழ் இன விடுதலைக்காகத் தம்முயிரை அர்ப்பணித்த உத்தமர் தம் தியாகத்தைப் பேணிப் பாதுகாத்து ஆண்டு தோறும் நினைவுகூர்ந்து கண்ணீர் விட்டழுது ஆறுதல் பெறுவது தமிழர் பாரம்பரியம், மரபாகும்.

தெய்வ நம்பிக்கை, மத நம் பிக்கை கொண்டோர் தம் வீடுகளிலும், கோவில்களிலும்வழிபாடியற்றுவர். இந்து மக்கள் ஈமக்கடன் செய்வதற்கு ஆற்றோரம், கடலோரம் சென்று அந்த இடங்களில் நீராடிப் பூஜைகள் செய்து ஆத்ம சாந்திப் பிரார்த்தனை செய்வது, ஈமக் கடன் செய்வது வழக்கம்.

கடந்த பத்து ஆண்டுகளிலும் அளவிடா நெருக்கடிகள் மத்தியிலும் இந்த நினைவேந்தல் நிகழ்வுகளில் ஆங்காங்கே, குறிப்பாக முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் நினைவிடத்திலும் அணிதிரண்டு, ஒன்றுகூடி, கண்ணீரில் நனைந்து, உளமுருகிப் பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இவ்வாண்டும் இந்தப் பிரார்த்தனைகள், அஞ்சலி நிகழ்ச்சிகள், ஈமக்கடனியற்றுதல் இடம்பெறவுள்ளன. அது எமது கடமை.

சென்ற காலங்களை விட இவ்வாண்டு ஏப்ரல் 21இல் இடம்பெற்ற ஐ.எஸ்.ஐ.எஸ். தற்கொலைதாரிகளின் குண்டுத் தாக்குதல்கள், அப்பேரழிவு காரணமாய் நாட்டில் மீண்டும் அவசரகாலச் சட்டங்களும், பயங்கரவாதத் தடைச் சட்டங்களும் தீவிர நடைமுறையில் இருக்கின்றன.

வடக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்க நடவடிக்கைகள் இல்லாத நிலையிலும் தமிழர் நிலமெல்லாம் இராணுவ மயம்.

சோதனைச் சாவடிகள், மீண்டும் அச்சுறுத்தல், பாடசாலைப் பிள்ளைகளிடமும் சோதனை, ஐ.எஸ்.ஐ.எஸ். பற்றியே பதற்றம், அந்தப் பிஞ்சுகளிடமும் நிச்சயம் உளவியல் பாதிப்பு ஏற்படும் நிலை.

இந்த நிலையைக் கருத்தில்கொண்டு தமிழன் விடுதலையை நெஞ்சிலிருத்தி அதற்காய் உயிர் கொடுத்த, களப்பலியாகிவிட்ட உத்தமருக்கு அஞ்சலி செய்யும் ஒரே எண்ணத்துடன் அமைதி காத்துச் செயல்படுவோம்.

ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் ஈமக்கடன் செய்வதிலும் ஆழ்ந்த பற்றுறுதியுடன் அர்ப்பணித்துச் செயலாற்றுவோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.