அகதிகளை சந்தேகிப்பதை விடுத்து பாதுகாக்க நடவடிக்கை எடுங்கள்!

Report Print Sumi in அறிக்கை

இலங்கையில் தஞ்சமடைந்துள்ள அகதிகளின் உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு எம் முன்னிலையில் உள்ளதென வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக உள்நாட்டில் தஞ்சமடைந்துள்ள அகதிகள் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளமை வெளிப்படையான உண்மையாகவுள்ளது.

எம்மைப் பொருத்தளவில் உள்நாட்டு இடம் பெயர்வாழ்விலும், அகதி வாழ்விலும் பெரும் சவால்களை அனுபவ ரீதியில் நாம் கண்டிருக்கின்றோம். நாம் அனுபவித்த இடம்பெயர்வாழ்வினதும், அகதி வாழ்வினதும் அவலங்களை எம்மால் இலகுவில் எம்மால் மறந்துவிட முடியாது. இந்நிலையில் மற்றவர்களுக்கு இடர் ஏற்படும் போது அனுபவ ரீதியிலான நேசக்கரத்தினை நாம் நீட்ட வேண்டும்.

யதார்த்தம் இவ்வாறு இருக்கையில் நாம் உள்நாட்டுக்குள் அகதிகளாக தங்கியுள்ளவர்களை நேசிக்கத் தவறுவது அடிப்படையில் வேதனைக்குரியது.

எம்மவர்கள் இன்றும் இலட்சக்கணக்கில் இந்தியாவிலும், மேற்குலகிலும் அகதிகளாக வாழ்கின்றனர். மேலும், எமது இனத்திற்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராக நாம் அரசியல் ரீதியிலும், மனித உரிமை ரீதியிலும் சர்வதேச நியாயம் கேட்டு போராடி வருகின்றோம்.

இந்நிலையில் ஏனையவர்களின் உரிமை விடயத்தில் அதீத நாட்டமுடையவர்களாக நாம் பக்குவமடைய வேண்டும். எமக்கான மனித உரிமை சார் விடயங்களில் மிகவும் கரிசனையாகவுள்ள நாம் வேறு நாட்டவர்களின் விடயத்தில் மௌனமாக அல்லது எதிர்மறையான எண்ணங்களுடன் இருப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.

உலகம் ஏற்றுக்கொண்ட மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு காரணமானவர்களாக நாமே இருக்கவேண்டும்.

குற்றங்கள் நடக்கின்றன. அச்சகரமான சூழல் உள்ளது என்பதற்காக ஒரு இனத்தின் மீதோ அல்லது எதிலிகள் மீதோ எதிர்ப்புணர்வினை வெளிப்படுத்துவது நியாயமல்ல. ஓர் பிரச்சினையில் இருந்து மீள்வதற்காக கூட்டுப்பொறுப்புடன் அனைவருமாக முயற்சிப்பதற்கான உத்தியும் அது அல்ல.

அகதிகளாக உள்நாட்டில் தஞ்சமடைந்துள்ள வெளிநாட்டவர்கள் தமது நாடுகளில் தம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடியாமையின் காரணமாகவே இங்கு வந்துள்ளார்கள் அவர்களது இன்றைய நிலைமையினை நாம் கருணை கொண்டு நோக்க வேண்டும்.

உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அம் மக்களின் நடைமுறை வாழ்க்கையைப் பாதுகாக்கவேண்டிய தார்மீகப்பொறுப்பே எம்முன் உள்ளது. இதை விடுத்து சந்தேகக் கண்கொண்டும் மனிதாபிமானத்தினை மறந்தும் செயற்படுவது உலகம் ஏற்றுக்கொண்ட நாகரீகமாகவோ சர்வதேச ஒழுங்காகவோ மனித உரிமை பற்றிய விழிப்பாகவோ அமையமாட்டாது.

எனவே அகதிகள் விடயத்தில் எம்மத்தியில் போதிய விழிப்புணர்வு அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.