மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் நியமனம் தொடர்பில் எனக்கு பூரண அறிவுண்டு! வியாழேந்திரன் MP

Report Print Murali Murali in அறிக்கை

யாராக இருந்தாலும் மக்கள் நலனுக்கு மாறான செயலாக இருந்தால் அதனை எதிர்ப்பேன் என நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர் இதனை தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையிர் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“கடந்த திங்கட்கிழமை நடந்த மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவாராக முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அகமட் நியமிக்கப்பட்டதை ஆட்சேபித்து வெளியேறினேன்.

இவரது நியமனம் எவ்வாறு இடம் பெற்றது? யார் காரணம்? என்பதை முதலில் முழுமையாக விளங்கிக்கொள்ள வேண்டும்.

01 ஐக்கிய தேசியக் கட்சி பிரதமர் தலைமையிலான அரசாங்கம் ஒருவரை சிபாரிசு செய்து அனுப்பும் போது ஜனாதிபதி நியமிப்பார்.

அந்த அடிப்படையில் நஸீர் அகமட்டை சிபாரிசு செய்து அனுப்பியது ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமே. கடந்த காலத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி சார்பானவர்களை தெரிவு செய்தவர் ஜனாதிபதியே.

தற்போது அவர்கள் எதிர்க்கட்சியில் இருப்பதனால் யாரையும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர்களாக நியமிக்கவில்லை.

02 உள்ளக, உள்நாட்டு அலுவல்கள், மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சு 13.02.2019 அன்று புதிய விதிகள் அடங்கிய கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

யார்? யார்? அபிவிருத்தி குழுத் தலைவர்களாக நியமிக்க முடியும் என. அதன்படி நஸீர் அகமட் அவர்கள் அபிவிருத்தி குழுத்தலைவராக நியமிக்கப்பட முடியாது.

இப்படி இருக்க கடிதம் அனுப்பிய ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கமே நஸீர் அகமட் அவர்களை அபிவிருத்தி குழுத்தலைவாராக நியமிக்குமாறு ஜனாதிபதிக்கு சிபாரி செய்துள்ளது. அதன்படி ஜனாதிபதி அவரை நியமித்துள்ளார்.

இவ் இரண்டு சந்தர்ப்பங்களிலும் முதல் பிழை ஐக்கிய தேசிய அரசாங்கம் பக்கமேயுள்ளது. அடுத்து ஜனாதிபதி கூட அமைச்சரவைக்கு தலைவராக இருப்பதால் இதில் கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.

அந்த விடயத்தில் அவரிலும் பிழையுண்டு. இவையெல்லாவற்றையும் கண்டித்தே அபிவிருத்தி குழு கூட்டத்தில் இருந்து வெளியேறினேன். அரசாங்க அதிபருக்குள்ள அதிகாரம் எனக்குத் தெரியும்.

இருப்பினும் அவரும் ஒரு Government Agent. அன்றைய தினம் நடந்த எதிர்ப்பு நிகழ்வை எழுத்து மூலம் அரசாங்கத்திற்கு தெரிவிக்க முடியும் . கூட்டத்தில் எடுக்கப்படும் சில தீர்மானங்கள், திட்டங்கள் கூட அரசாங்கத்திற்கு அனுப்பி வைக்கப்படுவதுண்டு.

ஆக அரசாங்க அதிபருடன் நான் முரண்படவில்லை. இவ் விடயம் அவருடன் பேசி முடிவெடுக்கக் கூடிய விடயமில்லை என்பதும் எனக்குத் தெரியும் . அது தெரியாதளவுக்கு நான் முட்டாள் அல்ல.

எனது எதிர்ப்பு ஜனாதிபதி, பிரதமர் உட்பட்ட இரண்டு தரப்புக்கும் செல்ல வேண்டுமென்பதே எனது நோக்கு.

25% ஆக உள்ள முஸ்லிம்கள் சார்பாக நான்கு பேர் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவர்களாக உள்ள வேளை, ஏன் 75% ஆக உள்ள தமிழர்கள் சார்பாக ஒரே ஒருவர் என்பதே எனது ஆதங்கம்.

அதை அன்றைய தினமே நான் ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்தியுள்ளேன். யாராக இருந்தாலும் என் மக்கள் நலனுக்கு மாறான செயலாக இருந்தால் எதிர்ப்பேன். அதைத் தான் நான் கடந்த காலம் முதல் செய்து வருகிறேன். இனிமேலும் அவ்வாறுதான்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.