நேர்வழியிலேயே ஆளுநராக செயற்பட்டேன் – இராஜினாமாக் கடிதத்தில் ஹிஸ்புல்லா

Report Print Ajith Ajith in அறிக்கை

“எனது இராஜினாமாக் கடிதம் முஸ்லிம் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்.” என்று கிழக்கு மாகாண ஆளுநராக பதவி வகித்த ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இன்று (03) அனுப்பிவைத்த இராஜினாமாக் கடிதத்திலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இராஜினாமாக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“2019 ஏப்ரல் 21ம் திகதி இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலை முஸ்லிம் உலமாக்கள் மற்றும் முஸ்லிம் சமூகம் கண்டித்துவருகின்றன.

எனினும், முஸ்லிம் சமூகத்தை மேலும் அவமானப்படுத்தி மலினப்படுத்தும் வகையில் மிக நுண்ணியமாக திட்டமிடப்படுகின்ற செயற்பாடுகள் மூலம் முஸ்லிம் சமூகத்தை அச்சமான சூழ்நிலைக்கு மூழ்கடிக்கின்ற சூழ்நிலைகளை அவதானிக்க முடிகிறது.

ஆளுநராக நேர்மையாகவும், விசுவாசமாகவும் சகல சமூகங்களினது நலன்களை பேணும் வகையிலும் நாட்டின் நலன் கருதியும் சேவையாற்றினேன்.

எனினும் எனது சமூகம் மிக மோசமாக குறி வைக்கப்படுவதுடன், இனவாத சக்திகள் எவ்வித அடிப்படைகளும் இன்றி நான் இராஜினாமா செய்ய வேண்டும் என கோருகின்றேனர்.

அத்தோடு நான் எனது பதவியை செய்யாவிட்டாலோ அல்லது பதவி நீக்கம் செய்யாவிட்டாலோ எனது முஸ்லிம் சமூகத்தின் உயிர்களையும் உடைமைகளையும் அழித்தொழிப்பதற்கான காரணமாக அமைந்து விடக் கூடிய வகையிலான அச்சுறுத்தல்களை அவதானிக்க முடிகின்றது.

நான் இராஜினாமா செய்யாவிட்டாலோ அல்லது பதவி நீக்கம் செய்யாவிட்டாலோ எனது சமூகத்தின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட மாட்டாது என்பதும் எனக்கு உணர்த்தப்பட்டது.

எனவே, இவ்வாறானதொரு சூழ் நிலையில் நான் எனது சமூகத்தின் நன்மை கருதி எனது இராஜினாமாவை சமர்ப்பிக்கிறேன்.

எனது இந்த இராஜினாமா எனது சமூகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் உங்களது கைகளை பலப்படுத்தும் என நான் மிக உறுதியாக நம்புகிறேன்.” என்றுள்ளது.