பிரதமரின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள விசேட செய்தி அறிக்கை!

Report Print Murali Murali in அறிக்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலினால் காயமடைந்த குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் மரணித்து அல்லது காயமடைந்தமையினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக விசேட சிறுவர் நிதியமொன்றை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இது குறித்து நாளை இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் அமைச்சரவை பத்திரம் ஒன்று தாக்கல் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் ஊடகப்பிரிவு இன்று வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“சிறுவர் நிதியமானது 500 மில்லியன் ரூபாவினை கொண்டதுடன், அவற்றில் 100 மில்லியன் தொகை அரசாங்கத்தினாலும், ஏனைய 400 மில்லியன் தொகை நன்கொடைகள் மூலமாகவும் பெற்றுக் கொள்ளப்பட உள்ளது.

அதேபோன்று இந்த தாக்குதலினால் காயமுற்ற நபர்களுக்கு வெளிநாடுகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள்வதற்கு தேவைப்படும் சந்தர்ப்பங்களில் அரசாங்கத்தினால் அந்த செலவுகளை மேற்கொள்வதற்கும் பாதிக்கப்பட்டவர்களின் விசேட தேவைகளை அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் அரசாங்கம் விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளது.

இந்த செயற்பாடுகளை மேற்பார்வை செய்வதற்கும் நடைமுறைப்படுத்துவதற்குமாக பிரதமரின் செயலாளரின் தலைமையில் விசேட குழுவொன்றும் நியமிக்கப்பட உள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலினால் இதுவரை 261 பேர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவற்றில் 174 பேரின் குடும்பங்களுக்கு நஷ்டஈட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

காயமடைந்த 407 பேரில் 226 பேர் தொடர்பான மருத்துவ அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளதுடன் அவர்கள் அனைவருக்கும் நஷ்டஈட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

மிகுதி மருத்துவ அறிக்கைகள் கிடைக்கப்பெற்றவுடன் அவர்களுக்கும் உரிய நஷ்டஈட்டுத் தொகையினை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் பாதிக்கப்பட்ட தேவாலயங்களை மீள புனரமைப்பதற்கு அவசியமான நிதி ஒதுக்கீடுகளும் அரசாங்கத்தினால் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய கட்டடத்தினை விஸ்தரிப்பதற்காக துறைமுக அதிகார சபைக்குரிய 09 பேர்ச்சஸ் காணியும் வழங்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு மற்றும் நிவாரணங்களை வழங்குவதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க முதலாவது அமைச்சரவை பத்திரத்தினை ஏப்ரல் மாதம் 22ம் திகதியே முன்வைத்தார். அதற்கு ஏப்ரல் மாதம் 25ம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்தது.

பின்னர் ஏற்பட்ட பதட்ட சூழ்நிலையினால் பாதிப்படைந்த முஸ்லிம் பள்ளிவாயல்களை புனரமைப்பு செய்வதற்கும், பாதிகப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கும் அங்கீகாரத்தினை பெற்றுக் கொள்வதற்காக பிரதமரினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு மே மாதம் 23ம் திகதி அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்தது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.