இருநாட்டுத் தொடர்புகளையும் வலுவடையச் செய்ய இணக்கம்! மோடியுடனான சந்திப்பு குறித்து மைத்திரி விளக்கம்

Report Print Rakesh in அறிக்கை

பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதையின் அடிப்படையில் இரு நாட்டுத் தொடர்புகளையும் வலுவடையச் செய்வதற்கு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பை ஏற்று இலங்கைக்கு வருகை தந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றுள்ளது.

ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மிகுந்த உற்சாகமாக வரவேற்றார்.

மரியாதை வேட்டுக்கள் மற்றும் இராணுவ அணிவகுப்பு மரியாதைகளுடன் இந்தியப் பிரதமருக்கான இந்த வரவேற்பு இடம்பெற்றுள்ளது.

நரேந்திர மோடி இரண்டாம் தடவையாகவும் இந்தியப் பிரதமராகப் பதவியேற்றதன் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனேயே தனது முதலாவது இராஜதந்திரச் சந்திப்பை மேற்கொண்டிருந்ததுடன், அதன்போது ஜனாதிபதியால் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்றே அவர் இலங்கைக்கான இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதலின் பின்னர் இலங்கையில் அரச முறை சுற்றுப் பயணத்தை மேற்கொள்ளும் முதலாவது அரச தலைவர் இந்தியப் பிரதமராவார்.

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்வின் பின்னர் ஜனாதிபதி மாளிகைக்கு வருகை தந்த இரு தலைவர்களும் இருதரப்பு கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.

பயங்கரவாதத் தாக்குதலின் காரணமாக பதற்ற நிலை காணப்படும் இந்தச் சூழ்நிலையில் தனது நாட்டுக்கு வருகை தந்து உலகத்தினருக்கு வழங்கிய நற்செய்தி தொடர்பில் ஜனாதிபதி இந்தியப் பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

அயல் நட்பு நாடான இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நம்பிக்கை மற்றும் நட்புறவு இந்தியப் பிரதமரின் இந்த விஜயத்தின் மூலம் மேலும் வலுவடைந்திருக்கின்றது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இந்த விஜயமானது இலங்கையின் பொருளாதார, வர்த்தக, சுற்றுலா போன்ற துறைகளின் வளர்ச்சிக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தும்.

இக்கட்டான சூழ்நிலைகளில் அயல் நட்பு நாடுகளுக்கு உறுதுணையாக இருப்பது தனது கடமையாகும் என்று இதன்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு தனக்கு விடுக்கப்பட்ட அழைப்பை மிகவும் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டதாகத் தெரிவித்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா, இலங்கை மீது வைத்துள்ள நம்பிக்கை எதிர்காலத்திலும் இவ்வாறே பாதுகாக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

மேலும் அனைத்துத் தரப்புகளின் உதவியுடன் சகல இனத்தோருக்கும் நீதியை நிலைநாட்டும் வகையில் கடமையாற்றி வரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வேலைத்திட்டங்கள் தொடர்பில் இந்தியப் பிரதமர் தனது மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளார்.

இருநாட்டு உறவுகளை மேம்படுத்தல், வலயத்தின் பாதுகாப்பு, சமாதானம், நிலைபேறான தன்மை ஆகியன தொடர்பில் இருநாட்டுத் தலைவர்களும் கலந்துரையாடியுள்ளனர்.

பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இலக்காகிய இரு நாடுகள் என்ற வகையில், பயங்கரவாதத்தைக் கடுமையாகக் கண்டிக்க வேண்டும் என்றும், பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதற்கு சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டும் என்றும் இருநாட்டுத் தலைவர்களும் இணங்கியுள்ளனர்.

இரு நாடுகளுக்கிடையில் நீண்டகால ஆழமான நட்புக்குப் பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதை, ஒத்துழைப்பு ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்ட கொள்கையே காரணமாக அமைந்திருக்கின்றது எனவும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும், இரு நாட்டுத் தலைவர்களும் இணங்கியுள்ளனர்.

தனக்கு வழங்கிய உற்சாகமான வரவேற்புக்கும், உபசரிப்புக்கும், ஜனாதிபதிக்கும், இலங்கை அரசுக்கும், இலங்கை மக்களுக்கும் இந்தியப் பிரதமர் தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தை அடையாளப்படுத்தும் முகமாக ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் இரு நாட்டுத் தலைவர்களும் மரக்கன்றொன்றை நாட்டினர்.

இந்தியப் பிரதமரின் இந்தச் சுற்றுப்பயணத்தை நினைவுகூரும் முகமாக இன்றைய தினம் இரு நாட்டுத் தலைவர்களும் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றும், அண்மையில் இந்தியப் பிரதமரின் பதவியேற்பு விழாவில் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றும் ஜனாதிபதியால் இந்தியப் பிரதமருக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers